கியூபெக் மாகாணத்தில் உள்ள கடைகள், உணவகங்கள் மற்றும் மதுக்கடைகளில் பிரெஞ்சு மொழி எந்தளவிற்குப் பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கண்டறிய, மாகாண அரசு இரகசிய விசாரணையாளர்கள்” மூலம் பிரம்மாண்ட ஆய்வை மேற்கொள்கிறது. சுமார் 7,800 வணிக நிறுவனங்களில் இந்த ரகசிய ஆய்வுகள் நடத்தப்பட உள்ளன.
கியூபெக்கின் மொழி பாதுகாப்பு அமைப்பான OQLF, இந்த வாரம் முதல் தனது விசாரணையாளர்களைச் சாதாரண வாடிக்கையாளர்கள் போலக் கடைகளுக்கு அனுப்பத் தொடங்கியுள்ளது.
இந்த விசாரணையாளர்கள் கடைகளுக்குள் நுழையும்போது, கடை ஊழியர்கள் தங்களை முதலில் பிரெஞ்சு மொழியில் வரவேற்கிறார்களா என்பதையும், பிரெஞ்சு மொழியில் சேவை வழங்கப்படுகிறதா என்பதையும் ரகசியமாகக் குறித்துக் கொள்வார்கள்.
இந்த ஆய்வின் முக்கிய நோக்கம் மாகாணத்தின் தற்போதைய மொழி நிலவரத்தைத் தெரிந்துகொள்வது மட்டுமே எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆய்வின் போது விதிமுறைகளை மீறும் கடைகளுக்கு உடனடியாக அபராதம் விதிக்கப்படாது எனவும் அந்த நிறுவனங்களின் பெயர்கள் பகிரங்கமாக வெளியிடப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 7,800 விசாரணைகளில் சுமார் பாதிக்கும் மேற்பட்டவை மொண்ட்ரியல் நகரில் உள்ள வணிக நிறுவனங்களில் மட்டுமே நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

