மொன்றியல் டவுன்டவுன் (Downtown Montreal) நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள 3 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் ஒரு பாகம் ஒன்று பலத்த சத்தத்துடன் திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மொன்றியலின் செயின்ட் ஹென்றி (Saint-Henri neighbourhood) குடியிருப்புப் பகுதியில் உள்ள காசெலைஸ் வீதி (Cazelais Street) மற்றும் வால்நட் வீதி சந்திப்புக்கு அருகே அமைந்துள்ள 3 மாடி குடியிருப்புக் கட்டிடமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
கட்டிடத்தின் ஒரு பகுதி சுவர் முற்றிலும் சரிந்து விழுந்துள்ளதை அடுத்து, அவசரகால மீட்புப் படையினரும் தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அருகில் உள்ள கட்டுமான தளத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த ஆழமான அகழ்வாராய்ச்சிப் பணிகளே (Excavation work) இந்த திடீர் இடிபாட்டிற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவே இந்த கட்டிடத்தின் அருகே, அத்திவாரம் தோண்டுவதற்காகப் பாரிய இயந்திரங்களைக் கொண்டு நிலத்தைத் துளையிடும் பணிகள் நடந்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இடிந்து விழுந்த நேரத்தில் கட்டிடத்திற்குள் பொதுமக்கள் யாரும் இல்லாததால், பெரும் உயிர்ச் சேதங்களோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என மொன்றியல் தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.


