கியூபெக் மாகாணத்தில் பல தசாப்தங்களாக வார இறுதி நாட்களில் மாலை 5 மணிக்கு கடைகளை மூட வேண்டும் என்றிருந்த கட்டாய விதிமுறை முடிவுக்கு வருகிறது.எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் கடைகள் இரவு 9 மணி வரை இயங்குவதற்கு அனுமதி அளிக்கும் ஓராண்டு கால முன்னோடித் திட்டத்தை (Pilot Project) கியூபெக் மாகாண அரசு அறிவித்துள்ளது. துணிக்கடைகள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஹார்டுவேர் கடைகள் உள்ளிட்ட சில்லறை விற்பனை நிலையங்கள் முதலானவை, கியூபெக் மாகாணத்தில் இனி வாரத்தின் ஏழு நாட்களும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம்.
மருந்தகங்கள் (Pharmacies) மற்றும் மளிகைக் கடைகள் ஏற்கனவே கூடுதல் நேரம் இயங்க அனுமதி பெற்றுள்ளதால், இந்த புதிய மாற்றத்தினால் அவற்றிற்கு பாதிப்பில்லை என்று தெரியவருகின்றது.
அமேசான், ஷீன் (Shein) மற்றும் டெமு (Temu) போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் 24 மணிநேரமும் இயங்குவதால், அவற்றுடன் போட்டியிடுவதற்காக, கியூபெக்கின் சாதாரண வணிகங்களுக்கும் கூடுதல் கால அவகாசம் தேவை என்று மாகாண அரசு கருதுகிறது.
அரசின் இந்த முடிவை பெரிய வணிக வளாகங்கள் வரவேற்றாலும், சிறிய கடை உரிமையாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் சில கவலைகளை முன்வைக்கின்றனர். ஏற்கனவே பணியாளர் பற்றாக்குறை நிலவும் சூழலில், கூடுதல் நேரம்கடைகளை இயக்குவது ஊழியர்களுக்குப் பணிச்சுமையை அதிகப்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
கியூபெக் மாகாணத்தில் இரவு வரை கடையைத் திறந்து வைப்பதால் மின்சாரம் மற்றும் சம்பளச் செலவு அதிகரிக்குமே தவிர, லாபம் பெருகுமா என்பது சந்தேகமே எனச் சில வணிகர்கள் கூறுகின்றனர்.
இதேவேளை, இந்த முன்னோடித் திட்டம் 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஓராண்டு காலத்தில் மக்களின் வரவேற்பு மற்றும் வணிக ரீதியான லாப நஷ்டங்களைக் கணக்கிட்ட பிறகு, இந்தச் சட்டத்தை நிரந்தரமாக்குவது குறித்து, கியூபெக் அரசு இறுதி முடிவு எடுக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

