கியூபெக் மாகாணத்தில் 1,200 மின்சாரப் பேருந்துகளின் சேவையை இடைநிறுத்துவதாக மாகாண கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
அண்மையில் பள்ளிக்கு மாணவர்களைக் கொண்டுசெல்லும் மின்சாரப் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் நடவடிக்கையால் இன்று மாகாணம் முழுவதும் பள்ளிப் பேருந்து சேவைகளில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வார ஆரம்பத்தில் மொன்ட்ரியல் நகரில், ‘லயன் எலக்ட்ரிக்’ (LION Electric) நிறுவனத்தின் மின்சாரப் பள்ளிப் பேருந்து ஒன்று நகர்ந்து கொண்டிருந்த போது, திடீரென தீப்பிடித்தது.
தீ விபத்து ஏற்படுவதற்கு முன்பு, பேருந்தில் இருந்த ஐந்து குழந்தைகளையும் ஓட்டுநர் உடனடியாக வெளியேற்றி, பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றார்.
இந்த விபத்து, வாகனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருக்கலாம் என்று கல்வி அமைச்சகம் சந்தேகித்துள்ளது.
இது குறித்து விரிவான விசாரணை நடத்த கனடா போக்குவரத்துத் துறை (Transport Canada) ஒரு குழுவை அமைத்துள்ளது.
மாணவர்களின் பாதுகாப்பே தங்களின் முக்கிய நோக்கம் என்று கூறியுள்ள கியூபெக் மாகாண கல்வி அமைச்சர் சோனியா லெபெல் மற்றும் போக்குவரத்து அமைச்சர் ஜோனதன் ஜூலியன் ஆகியோர் இணைந்து நேற்று மாலை வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், “இந்த தீ விபத்துக்குப் பிறகு, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 1,200 பேருந்துகளின் சேவையை உடனடியாக நிறுத்துமாறு பள்ளி சேவை மையங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
பேருந்து சேவை நிறுத்தத்தால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, தேவையான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பள்ளிச் சேவை மையங்களை கல்வி அமைச்சகம் கோரியுள்ளது.


