அமெரிக்காவிலிருந்து கனடாவுக்கு இறக்குமதியாகும் ஒரேஞ்ச் பழச்சாற்றின் அளவு, கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, தற்போது குறைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
கனடாவின் புள்ளியியல் நிறுவனம் (Statistics Canada) மற்றும் அமெரிக்க மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மையம் (U.S. Census Bureau) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஜூன் மாதத்தில் அமெரிக்காவிலிருந்து கனடாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஒரேஞ்ச் பழச்சாற்றின் மொத்த மதிப்பு $5.78 மில்லியன் டாலராக சரிவடைந்துள்ளது.
இந்த ஆண்டின் ஜனவரி மாதத்திலிருந்து தற்போதைய காலப்பகுதிவரை, மாதந்தோறும் ஒரேஞ்ச் பழச்சாறு இறக்குமதியின் மதிப்பு 64% குறைந்துள்ளது.
டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கைகளுக்குப் பதிலடி தரும் விதமாக, அமெரிக்காவிலிருந்தான இறக்குமதிகள் சிலவற்றுக்கு கனடா கடந்த மார்ச் 4-ம் தேதி 25% வரி விதித்தது
அந்த வரிவிதிப்புப் பட்டியலின் கீழ் ஒரேஞ்ச் பழச்சாறும் சேர்க்கப்பட்டது
இதுவே, அமெரிக்காவிலிருந்து கனடாவுக்கு இறக்குமதியாகும் ஒரேஞ்ச் பழச்சாற்றின் அளவு குறைந்தமைக்கான காரணம் என்று, மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர் வில்லியம் ஹக்கின்ஸ் தெரிவித்துள்ளார்.
வரி விதிப்பால் ஏற்படும் விலையேற்றம் மட்டுமின்றி, உலகளாவிய ஒரேஞ்ச் உற்பத்தியில் ஏற்பட்ட சரிவும் இந்த நெருக்கடிக்கு மற்றொரு காரணம் என்றும் கூறப்படுகின்றது.
