கியூபெக் (Quebec) மாகாணத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி மீது குற்றவியல் விசாரணை நடத்தப்பட்டு வருவதனை, கனேடிய மத்திய காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் கனடாவின் கனானாஸ்கிஸ் (Kananaskis), ஆல்பர்ட்டாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டின்போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறித்து இணையத்தில் அச்சுறுத்தும் கருத்துக்களை வெளியிட்டதாக, அந்த காவல்துறை அதிகாரி மீது, குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
“ஜர்னல் டி மொண்ட்ரியல்” (Journal de Montréal) எனும் பிரெஞ்சு மொழி நாளிதழ் முதலில் இந்தச் செய்தியை வெளியிட்டது.
அந்த அதிகாரி டொனால்ட் டிரம்ப் குறித்து அச்சுறுத்தும் கருத்துக்களை வெளியிட்டதாகவும், டிரம்ப்பின் நடமாட்டம் குறித்த தகவல்களை கசியவிட்டதாகவும் நாளிதழ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இத்தகைய தகவல் கசிவு, டிரம்ப்பின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
கனேடிய காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் கார்ப்பரல் எரிக் காசே (Cpl. Érique Gasse) இது குறித்து கூறுகையில், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது குற்றவியல் விசாரணை மற்றும் உள்நடத்தை விதிகளின் மீறல் மறுஆய்வு நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
