கியூபெக் மாகாணத்தில், முதன்மை பழங்குடியினர் சமூகமான கனேசடேக்
(Kanehsatà:ke), தற்போது பாதுகாப்பின்மை மற்றும் பதற்றமான சூழலில்
சிக்கியுள்ளது.
இங்கு உள்ளூர் காவல்துறையின் படை கலைக்கப்பட்டதால், பாதுகாப்புப்
பணியை `கனேசடேக் பெரிமீட்டர் செக்யூரிட்டி' (Kanesatake Perimeter
Security – KPS) என்ற சிறிய தன்னார்வக் குழு மேற்கொண்டு வருகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில், கனேசடேக் பகுதியில் வன்முறை, வாகன
விபத்துகள் மற்றும் தீ வைப்புச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இதற்கு முக்கிய காரணமாக, சட்டவிரோதமாகச் செயல்படும் கஞ்சா
கடைகள் மற்றும் குப்பைகள் கொட்டுதல் போன்றவை
குறிப்பிடப்படுகின்றன.
கியூபெக் நீதிமன்ற ஆவணங்களின்படி, நாளொன்றுக்கு 500-க்கும் மேற்பட்ட
பாரவூர்திகள் இந்த சமூகம் வாழும் பகுதியில் சட்டவிரோதமாக குப்பைகளை
கொட்டியுள்ளன.
இந்தச் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும், ஒழுங்கமைக்கப்பட்ட
குற்றங்களுக்கும் கஞ்சா கடைகள் தொடர்பு கொண்டிருப்பதாக
தேர்ந்தெடுக்கப்பட்ட பழங்குடியினர் கவுன்சில் அதிகாரிகள்
தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
