மொன்றியலின் ‘சுட்-ஓயஸ்ட்’ (Sud-Ouest) பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சகோதரர்கள் இருவரும் கொலை செய்யும் நோக்கத்துடனேயே அங்கு சென்றதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2024-ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம், 32 வயதான மார்க்-ஆண்ட்ரே கௌதியர் (Marc-André Gauthier) என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கின், விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.
இவ்வளக்கில் ஜேசன் பிணல் மற்றும் கெவின் பிணல் ஆகிய இரு சகோதரர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற இறுதிக்கட்ட வாதத்தின் போது, “இது தற்காப்புக்காகச் செய்யப்பட்ட தற்செயலான செயல் அல்ல எனவும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒரு படுகொலை” எனவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் சாரா-ஜூலி சிகோயின் (Sarah-Julie Chicoine) தெரிவித்தார்.
போதைப்பொருள் தொடர்பான பணக் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட மோதலே இந்தக் கொலைக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
துப்பாக்கியை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்துக்கொண்டு, பாதிக்கப்பட்டவரின் வீட்டின் அருகே சகோதரர்கள் காத்திருந்ததை கண்காணிப்பு கமெரா (CCTV) காட்சிகள் உறுதிப்படுத்துகின்றன எனவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால், தாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவே அங்கு சென்றதாகவும், கௌதியர் தங்களைத் தாக்கக்கூடும் என்ற அச்சத்திலேயே துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் பிரதிவாதிகள் தரப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


