கனடாவின் கியூபெக் மாகாணம், நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களுக்கான சேவைகளைக் குறைக்கக்கூடும் என கியூபெக்கின் குடிவரவு அமைச்சர் ஜீன்-பிரான்சுவா ரொபேர்ஜ் (Jean-François Roberge) எச்சரித்துள்ளார்.
கனடாவின் மத்திய அரசாங்கம் தனது வருடாந்திர குடியேற்ற இலக்குகளை பாதியாகக் குறைக்கத் தவறினால் இந்த கடுமையான முடிவை எடுக்க நேரிடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கியூபெக் மாகாணத்தில், குறிப்பாக மொன்ட்ரியல் மற்றும் லாவால் (Laval) பகுதிகளில், நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதில் கவனம் செலுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அமைச்சர் ரொபேர்ஜ், கூட்டணி அவெனிர் கியூபெக் (CAQ) அரசாங்கத்தின் 2026 – 2029 ஆம் ஆண்டுக்கான குடியேற்ற இலக்குகளை விளக்கும் அறிக்கையை வெளியிட்டார்.
இறுதி முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை என்றாலும், கடினமான முடிவுகள் அவசியமாகலாம் என்று அவர் வலியுறுத்தினார்.
கடந்த ஆண்டு புகலிடம் தேடுபவர்களுக்கு ஆதரவளிக்க மாகாண அரசு 500 மில்லியன் டாலர் செலவிட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதுள்ள கியூபெக் மாகாணத்தில் உள்ள பொதுச் சேவைகளின் நிலை, வரி செலுத்தும் கியூபெக் வாசிகளுக்கு “நியாயமற்றதாக” உள்ளது என்று கூறிய ரொபேர்ஜ், கியூபெக் வாசிகள் குடும்ப மருத்துவர்களை அணுகுவதற்கும், வீடு கண்டுபிடிப்பதற்கும் சிரமப்படுவதாகவும் தெரிவித்தார்.
இந்த அறிக்கையானது, இந்த ஆண்டின் 66,500 என்ற இலக்கிலிருந்து நிரந்தர குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான மூன்று சாத்தியமான சூழ்நிலைகளை முன்வைக்கிறது.
அடுத்த நான்கு ஆண்டுகளில், குடியேற்ற இலக்குகளின் எண்ணிக்கை 45,000, 35,000 அல்லது 25,000 ஆகக் குறைக்கப்படலாம்.
பிரெஞ்சு மொழிக்கு ஆபத்து இல்லாத பிராந்தியப் பகுதிகளில் புதியவர்கள் குடியேறுவதை எளிதாக்கும் வகையில், மொன்ட்ரியல் மற்றும் லாவால் பகுதிகளில் நிரந்தரமற்ற குடியேற்றக் குறைப்பு நடவடிக்கைகளில் கியூபெக் அரசு கவனம் செலுத்தும் என்று ரொபேர்ஜ் கூறினார்.
அதேவேளை, தற்போதுள்ள நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்குவதற்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கியூபெக்கின் குடிவரவு அமைச்சர் ஜீன்-பிரான்சுவா ரொபேர்ஜ் தெரிவித்துள்ளார்.
