அமெரிக்காவிலிருந்து வரும் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரிகளால் டொராண்டோ நகரத்தில் வேலை இழப்புகள் ஏற்படும் என்று, அந்த நகரத்தின் வணிக நிறுவனங்கள் அச்சம் தெரிவித்துள்ளன.
டொராண்டோ நகரத்தில் இயங்கிவரும் மூன்றில் ஒரு பங்கு வணிக நிறுவனங்கள், வேலை இழப்புகளை ஏற்படுத்த வேண்டியிருக்கும் என்று இது தொடர்பான கருத்துக்கணிப்பொன்றில், கூறியுள்ளன.டொராண்டோ நகரத்தின் பொருளாதாரத்தில் அமெரிக்க வரி விதிப்புகள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து வணிகங்களின் கருத்துக்களை அறிவதற்கு, அந்த நகர நிர்வாகமானது கருத்துக்கணிப்பொன்றை நடத்தியது இந்த கருத்துக்கணிப்பின் தரவுகள் டொராண்டோ நகரத்தின் மேயர் ஒலிவியா சௌவின் நிர்வாகக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
டொராண்டோ வணிகங்கள் அமெரிக்காவுடனான வர்த்தகத்தை எவ்வளவு நம்பியிருக்கின்றன என்பதையும் அந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.
அந்த கருத்துக்கணிப்பில் பதிலளித்த பாதிக்கும் மேற்பட்டவர்கள், தங்கள் வணிகத்திற்கு தேவையான மூலப்பொருட்கள், உணவு, பானங்கள், கட்டுமானப் பொருட்கள் மற்றும் நுகர்வோர் பொருட்கள் உட்பட்டவை தொடர்பில், அமெரிக்க இறக்குமதிகளை மட்டுமே நம்பியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள வர்த்தகப் பிரச்சினைகளால் உள்ளூர் வணிக நிறுவனங்கள் எவ்வளவு அச்சத்தில் உள்ளன என்பதை கருத்துக்கணிப்பு முடிவுகள் காட்டுகின்றன என்று, டொராண்டோ நகர சபை உறுப்பினர் ஜோஷ் மாட்லோ கூறினார்.
இதேவேளை, வரிப் பிரச்சினைக்கு பதிலளிக்கும் வகையில் தனது 10 அம்சத் திட்டத்தை டொராண்டோ நகரம் விரைவாக செயல்படுத்தி வருவதாக, டொராண்டோ நகரத்தின் மேயர் Olivia Chow தெரிவித்துள்ளார்.
இந்த 10 அம்சத் திட்டத்தினுள், வணிகங்களுக்கான ஆறு மாத சொத்து வரி ஒத்திவைப்பும்
உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.