கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 7-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும், கனடா நாட்டின் 24-வது பிரதமராகவும் மார்க் கார்னி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப், கனடா பொருட்களுக்கு வரியை அதிகரிப்பது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில் கனடாவின் பழமையான பங்காளி நாடான பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை சந்திக்க பிரதமர் மார்க் கார்னி இன்று பிரான்சுக்கு சென்றடைந்தார்.
பிரான்சுக்கு பயணமாவதற்கு முன்னர் ஊடகங்களுக்கு பிரெஞ்சு மொழியில்வழங்கிய செய்தியில் “பிரான்ஸ் போன்ற நம்பகமான நட்பு நாடுகளுடன் கனடா தனது உறவுகளை வலுப்படுத்துவது முன்னெப்போதையும் விட முக்கியமானது” என்று தெரிவித்தார்.
“நிலையற்றதாகவும் ஆபத்தானதாகவும் மாறி வரும் உலகை எதிர்கொள்ள நமது இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டும்,” என்று அவர் மேலும் தெரிவித்தார். “பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நெருக்கடியான இந்த காலகட்டத்தில், நமது மதிப்புகளைப் பகிர்ந்து கொண்டு, செயல் மூலம் அவற்றை பிரான்சின் நம்பகமான, மற்றும் வலுவான கூட்டாளியாக கனடா மாறவேண்டும்.”எனவும் தெரிவித்தார்.
வரலாற்று ரீதியான உறவுகளை வலுப்படுத்தவும், வர்த்தகம், பாதுகாப்பு குறித்து உரையாடவும் பிரெஞ்சு ஜனாதிபதி Emmanuel Macron, இங்கிலாந்து பிரதமர் Keir Starmer ஆகியோரால் அழைக்கப்பட்டதாக Carney தெரிவித்தார்.
இந்த பயணத்தின் நோக்கம் கனடாவின் இரண்டு நெருக்கமான, நீண்டகால பொருளாதார, பாதுகாப்பு கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதாகும் என கனடிய பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
அடுத்து அவர் லண்டனில் தரையிறங்குவார், அங்கு அவர் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் மன்னர் சார்லஸுடன் சந்திப்பை மேற்கொள்வார்.
புதிய கனடிய பிரதமர் இங்கிலாந்திற்கு விஜயம் செய்யும் போது அவரை சந்திப்பதற்கு மன்னரிடம் ஒரு தீர்க்கமான உறுதிப்பாடு உள்ளதாக அரண்மனைக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான முரண்பாடுகள் குறித்து மன்னர் கவலை கொண்டுள்ளதாக இங்கிலாந்தின் செய்தி ஊடகங்கள் கடந்த வார இறுதியில் தெரிவித்தன.
இந்த பயணத்தை முடித்துக் கொண்டு அவர் செவ்வாய்க்கிழமை (18) மீண்டும் நாடு திரும்புவார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.