ஒன்டாரியோ மாகாண அரசு Bill 5 எனப்படும் சர்ச்சைக்குரிய சட்டமூலத்தை நிறைவேற்றினால், “மோதல் ஏற்படும்” என்று பழங்குடி இனத் தலைவர்கள், கடுமையாக எச்சரித்துள்ளனர்.
இந்தச் சட்டம் பழங்குடியினரின் உடன்படிக்கை உரிமைகளை மீறுவதாகவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை பலவீனப்படுத்துவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
அந்த சட்டமூலத்தைக் கைவிடுமாறு ஒன்டாரியோ மாகாண அரசாங்கத்தை அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
”சட்டமூலம் 5” ஆனது, ஒன்டாரியோவின் அழிந்துவரும் உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை முன்மொழிகிறது.
குறிப்பிட்ட திட்டங்களுக்காக மாகாண மற்றும் நகராட்சி சட்டங்களை நிறுத்திவைக்கக்கூடிய “சிறப்புப் பொருளாதார மண்டலங்களை” உருவாக்குவதும் இந்த மாற்றங்களில் ஒன்று ஆகும்.
வடக்கு ஒன்டாரியோவில் உள்ள ரிங் ஆஃப் ஃபயர் (Ring of Fire) கனிமப் படுகை மற்றும் நெடுஞ்சாலை 401 இன் கீழ் முன்மொழியப்பட்ட சுரங்கப்பாதை போன்ற முக்கிய திட்டங்களுக்கு, இந்த புதிய சட்டத்தின் கீழ் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று, ஒன்டாரியோ மாகாண அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையிலேயே, இச்சட்டமூலத்தை நிறைவேற்றக்கூடாது என்ற கடும் தொனியிலான கோரிக்கையை, பழங்குடி இனத் தலைவர்கள் எழுப்பியுள்ளனர்.
