கனடாவிற்கான தங்கள் இரண்டு நாள் அரசமுறைப் பயணத்தை மன்னர் சார்ள்ஸ் மற்றும் ராணி கமிலா நிறைவு செய்துள்ளனர். மன்னர் சார்ள்ஸ் நாடாளுமன்றத்தில் ஆற்றிய தனது சிம்மாசன உரையில், கனடாவின் தனித்துவமான அடையாளத்தைப் பாராட்டினார்.
பிரிட்டிஷ், பிரெஞ்சு மற்றும் பூர்வகுடி மக்களின் பண்பாட்டு வேர்களைப் பற்றி அவர் தமது உரையில் எடுத்துரைத்தார். கனடா தனது பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பாக மாகாணங்களுக்கு இடையேயான வர்த்தகத் தடைகளை நீக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதேவேளை, மன்னரின் உரை, கனடாவின் பிரதமர் மார்க் கார்னியின் தேர்தல் வாக்குறுதிகளைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருந்ததாகத் தெரிய வருகின்றது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கனடாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விடுத்த இந்த வேளையில், இந்த சிம்மாசன உரையை ஆற்றவென மார்க் கார்னி, மன்னர் சார்ள்ஸை கனடாவிற்கு அழைத்தமை ஒரு இராஜதந்திர நகர்வாக மதிப்பிடப்படுகின்றது.

