கனடாவின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான கூடுதல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக கனேடியப் பிரதமரும் லிபரல் கட்சித் தலைவருமான மார்க் கார்னி அறிவித்துள்ளார்.
கியூபெக் மாகாணத்தின் Dorval நகரில் அவர் இந்த அறிவிப்பினைச் செய்துள்ளார்.
எதிர்வரும் கனேடியப் பொதுத்தேர்தல் ஒரு நெருக்கடியான காலப்பகுதியில் இடம்பெறுவதாக மார்க் கார்னி, கூறினார்.
மேலும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கனடாவின் பொருளாதாரத்தையும் இறையாண்மையையும் அச்சுறுத்தும் நிலை காணப்படுவதாகவும் இந்த நிலையில், உள்நாட்டில் கனடாவின் வணிகங்கள் மற்றும் தொழில்துறையை ஆதரிப்பதன் மூலமும், புதிய சந்தைகளுக்கு அவற்றைப் பன்முகப்படுத்த உதவுவதன் மூலமும் கனடாவைப் பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆபத்தான மற்றும் பிளவுபட்டதாக சர்வதேச நிலைமைகள் அதிகரித்து வருவதாகத் தெரிவித்த மார்க் கார்னி, கனேடிய இராணுவத்தை மீண்டும் கட்டியெழுப்புதல், மறு முதலீடு செய்தல் மற்றும் மறுசீரமைப்பதன் மூலம் கனடாவின் இறையாண்மையைப் பாதுகாக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.