ஐக்கிய அமெரிக்கா கனேடிய பொருட்கள் மீது விதித்த நியாயப்படுத்த முடியாததும், நியாயமற்றதுமான வரிகளுக்குப் பதில் நடவடிக்கையாக 155 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்கள் மீது கனேடிய அரசு வரிகளை விதிக்குமென கனேடிய நிதியமைச்சரும் பல்மட்ட அரசுகளுக்கு இடையிலான விவகாரங்களுக்கான அமைச்சருமான டொமினிக் லெப்ளாங்கும் வெளியுறவு அமைச்சர் மெலனி ஜொலியும் இணைந்து அறிவித்தனர்.
கனடாவின் நலன்களையும் நுகர்வோரையும் பணியாளர்களையும் வணிக நிறுவனங்களையும் பாதுகாப்பதும் தற்காப்பதுமே இந்தப் பதில் நடவடிக்கைகளின் ஒரே நோக்கமாகும் என்றும் தேவையற்றும் நியாயமின்றியும் எமது தேசம் இலக்கு வைக்கப்படும் போது நாம் எதுவும் செய்யாது பார்த்துக்கொண்டிருக்கப்போவதில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
வரித் திட்டம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்,
எமது பதில் நடவடிக்கையின் முதல் கட்டத்தில் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 30 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்கள் மீதான வரிவிதிப்பு உள்ளடங்குகின்றது.
ஐக்கிய அமெரிக்க வரிகள் நடைமுறைக்கு வரும் 2025 பெப்ரவரி 4 ஆம் திகதி அன்றே இந்த வரிகளும் நடைமுறைக்கு வரும்.
தோடம்பழச்சாறு, கச்சான்பட்டர், வைன், மதுபானங்கள், பியர், கோப்பி, வீட்டு உபகரணப்பொருட்கள், ஆடைகள், பாதணிகள், மோட்டார் சைக்கிள்கள், அழகுசாதனப்பொருட்கள், கடதாசிக்கூழ், கடதாசி போன்றன வரிவிதிப்புப் பட்டியலில் அடங்கியிருக்கும். இந்தப் பொருட்களின் விரிவான பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.
ஐக்கிய அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 125 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மேலதிக பொருட்களுக்கும் வரிகளை விதிக்க அரசு உத்தேசித்துள்ளதாக அமைச்சர் லெப்ளாங் மேலும் அறிவித்தார்.
வரி நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பாக முழுமையான பட்டியல் பகிரங்கப்படுத்தப்பட்டு, மக்கள் கருத்து வெளியிடுதவற்கு 21 நாட்கள் வழங்கப்படும்.
மின்சார வாகனங்கள் உட்படப் பயணிகள் வாகனங்களும் பார ஊர்திகளும் உருக்கு மற்றும் அலுமினியப் பொருட்கள், குறிப்பிட்ட பழங்களும் மரக்கறிகளும் மாட்டிறைச்சி, பன்றியிறைச்சி, பாற்பொருட்கள், பார ஊர்திகள், பேருந்துகள், பொழுதுபோக்கு வாகனங்கள், பொழுதுபோக்கு படகுகள் போன்றனவும் இந்தப் பட்டியலில் அடங்கியிருக்கும்.
நியாயப்படுத்த முடியா வரிகளைக் கனடா மீது ஐக்கிய அமெரிக்கா தொடர்ந்து நடைமுறைப்படுத்தினால், முதல் கட்டப் பதில் நடவடிக்கைகளுக்கு மேலதிகமான நடவடிக்கைகளை ஆராயும் போது வரி அல்லாத நடவடிக்கைகள் உட்பட அனைத்துத் தெரிவுகளையும் அரசு கருத்திற் கொள்ளுமென அமைச்சர்கள் லெப்ளாங்கும் ஜொலியும் வலியுறுத்தியுள்ளனர்.
தேவையற்றும் நியாயமின்றியும் எமது தேசம் இலக்கு வைக்கப்படும் போது நாம் எதுவும் செய்யாது பார்த்துக்கொண்டிருக்கப்போவதில்லை. கனேடிய நலன்களையும் வேலைவாய்ப்புக்களையும் அரசு பாதுகாக்கும். பாதிக்கப்படும் பணியாளர்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் உதவியளிக்க நாம் தயாராகவிருக்கின்றோம்.
வரிகளை விதிக்கும் ஐக்கிய அமெரிக்க அரசின் முடிவு, அமெரிக்க பொருளாதாரத்திற்கும் மக்களுக்கும் பேரழிவான விளைவுகளை ஏற்படுத்தும். வரிகள் ஐக்கிய அமெரிக்க மோட்டார் கார்த் தொழிற்சாலைகளிலும், எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் விற்பனை நிலையங்களிலும் அமெரிக்க நுகர்வோரின் செலவினத்தை அதிகரித்து, அமெரிக்க செல்வச் செழிப்பை ஆபத்துக்குள்ளாக்கும்.
உடனடிப் பதில் நடவடிக்கையாகக் கனடா விதித்த வரிகளாலும் எதிர்காலத்தில் விதிக்கக் கூடிய வரிகளாலும் கனேடிய தொழிலாளர்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்பைக் குறைப்பதற்கு விதிவிலக்கான நிவாரணத்தை வழங்குமாறு விடுக்கப்படும் கோரிக்கைகளைப் பரிசீலிப்பதற்கு வரி நிவாரணப் பொறிமுறை ஒன்றை உருவாக்கவும் அரச நடவடிக்கை எடுக்கின்றது. இந்தக் கட்டமைப்பு மற்றும் நடைமுறை குறித்த விபரங்கள் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும்.
கனடாவின் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும் பலப்படுத்தவும், ரீம் கனடாவாக ( Team Canada ) உறுதியான பதில் நடவடிக்கையை முன்னெடுப்பதற்கும் ஐக்கிய அமெரிக்காவில் முடிவெடுப்போரிடம் அனைத்துக் கனேடியர்களின் சார்பாகவும் வாதிடவும் மாகாண, பிராந்திய அரசுகளுடனும் வணிகத்துறை மற்றும் தொழிலாளர் தலைவர்களுடனும் அரசு தொடர்ந்தும் நெருக்கமாக இணைந்து செயலாற்றி வருகின்றது.