ஒன்டாரியோ மாகாணத்தின் பீல், ஹால்டன், டர்ஹாம் மற்றும் யார்க் ஆகிய நான்கு பிராந்தியங்களுக்கும் மேலதிகமாக 1.4 பில்லியன் டொலர் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என சமூக அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
மக்கள்தொகை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ற வகையில் வீடமைப்பு, சுகாதாரம், குழந்தைப் பராமரிப்பு மற்றும் சமூக சேவைகளுக்கான நிதி ஒதுக்கப்படுவதில்லை என அந்த அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.
இதற்கமைய, 60-க்கும் மேற்பட்ட நகராட்சி, வர்த்தக மற்றும் இலாப நோக்கற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள், நவம்பர் 30ஆம் திகதி குயின்ஸ் பார்க்கில் ஒன்றுகூடி ‘905 தினம்’ என்ற பெயரில் பிரசார நடவடிக்கையை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.
ஒன்டாரியோ மாகாணத்தின் மொத்த மக்கள்தொகையில் சுமார் நான்கில் ஒரு பங்கைக் கொண்டுள்ள இந்தப் பிராந்தியங்களுக்கு, அதற்கேற்ற மாகாண நிதி கிடைப்பதில்லை என ஏற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குறிப்பாக, யார்க் பிராந்தியத்தில் 22 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் மலிவு விலை வீடுகளுக்காகக் காத்திருப்பதாகவும், பீல் பிராந்தியத்தில் நீண்டகாலப் பராமரிப்புச் சேவைகளுக்கான காத்திருப்பு நேரம் மாகாண சராசரியை விட 35 சதவீதம் அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வீடின்மை, போதைப்பொருள் பாவனை மற்றும் உணவுப் பற்றாக்குறை போன்ற சமூகப் பிரச்சினைகள் அதிகரித்து வருவதால் உள்ளூர் வர்த்தக நிறுவனங்களும் பாதிக்கப்படுவதாக சமூகத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், 2027ஆம் ஆண்டுக்கான ஒன்டாரியோ மாகாண வரவுசெலவுத் திட்டத்தில் மேலதிக நிதி ஒதுக்கீடுகளை அறிவிக்க வேண்டும் என்றும், மக்கள்தொகை வளர்ச்சிக்கு ஏற்ப தற்போதைய நிதி ஒதுக்கீட்டு முறையை மறுசீரமைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
