மட்டக்களப்பு, வாகரை – பால்சேனையில் மனைவியின் திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவு தொடர்பான சந்தேகத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, 23 வயதுடைய மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகக் கூறப்படும் 26 வயதுடைய கணவர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை (24) காலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், பால்சேனை கோவில் வீதியைச் சேர்ந்த காளிராசா மனோஜா என்ற இளம் குடும்பப் பெண்ணே உயிரிழந்துள்ளார்.
கூலித் தொழிலாளியான அவரது கணவர் ஜெகநாதன் சுஜீவன், மனைவியின் உறவினரான இளைஞர் ஒருவர் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றமை தொடர்பில் சந்தேகம் கொண்டிருந்ததாகவும், அவரை வீட்டுக்கு வரவேண்டாம் என எச்சரித்திருந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவ தினத்தன்று இது தொடர்பில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான 119 ஊடாக சம்பவத்தை அறிவித்துவிட்டு, வாகரை பொலிஸ் நிலையத்துக்குச் சென்று கணவர் சரணடைந்துள்ளார். இதையடுத்து அவரைக் கைது செய்த பொலிஸார், தடயவியல் பிரிவினரின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், உயிரிழந்த பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று புதன்கிழமை (25) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
