கியூபெக் மாகாணத்தில் சுகாதாரப் பராமரிப்பைக் கண்காணிக்கும் அரசுடைமை நிறுவனமான ‘சான்டே கியூபெக்’கின் (Santé Québec) தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜெனீவியேவ் பிரோன் (Geneviève Biron), தனது பதவியிலிருந்து விலகவுள்ளார்.
இந்தப் பதவி விலகலானது எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் திகதி அமுலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘லிங்க்ட்இன்’ (LinkedIn) சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவொன்றின் ஊடாக பிரோன் தமது வெளியேற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
2025-2028 ஆம் ஆண்டுக்கான மூலோபாயத் திட்டத்தையும் தாம் ஆரம்பித்த மாற்றங்களையும் மேலும் முன்னெடுத்துச் செல்லத் தமக்கு இன்னும் கூடுதல் கால அவகாசம் கிடைத்திருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கியூபெக் சுகாதார அமைச்சர் மரி-கார்லின் லாஃப்லாம் (Marie-Karlynn Laflamme), அண்மைய நாட்களில் பிரோன் மற்றும் சான்டே கியூபெக் நிறுவனத்தின் சிரேஷ்ட நிர்வாகத்தினரையும், பணிப்பாளர் சபையினரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
“சான்டே கியூபெக் நிறுவனத்தைக் கலைப்பதற்கு முன்னரான மாற்றத்திற்கான ஒத்துழைப்புச் செய்தியை வழங்கவே அவர்களைச் சந்தித்ததாக, அமைச்சின் பேச்சாளர் நிக்கலஸ் கிராவெல் (Nicolas Gravel) தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
