கிரிமியாவுக்கான முக்கிய விநியோகப் பாதையான கெர்ச் பாலத்தின் மீது மூன்று நாட்களாகத் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியுள்ள உக்ரைன், அதன் சாலைப் பகுதியை வீழ்த்தியுள்ளதுடன், இரயில் பாதையையும் செயலிழக்கச் செய்திருக்கக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கெர்ச் பாலத்தின் மீது உக்ரைன் மேற்கொண்ட நான்காவது மற்றும் மிகவும் சிக்கலான இந்த நடவடிக்கையால், ரஷ்யப் பகுதியிலிருந்து கிரிமியாவுக்கான குறுகிய விநியோகப் பாதை அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைனின் முப்படைகளின் பொதுப் பணியகம் (General Staff) அறிவித்துள்ளது.
தெற்கு உக்ரைனில் உள்ள ரஷ்யப் படைகளை முடக்கும் பரந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாக, ரொஸ்டோவ் (Rostov) மற்றும் கிராஸ்னோடார் கிராய் (Krasnodar Krai) பகுதிகளில் உள்ள எண்ணெய் நிலையங்கள் மற்றும் விநியோகப் பாதைகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
கடந்த 16ஆம் திகதி உக்ரைன் ஆளில்லா விமானங்கள் மூலம் பாலத்தின் சாலைப் பகுதியைச் சேதப்படுத்தியதாகவும், 17ஆம் திகதி ‘பலியானிட்சியா’ (Palyanytsia) தற்கொலை ஆளில்லா விமானங்களைக் கொண்டு சாலைப் பகுதியை இடியச் செய்ததாகவும் உக்ரைனின் பாதுகாப்புச் சேவை (SBU) தெரிவித்துள்ளது.
தொடர்ந்து 18 மற்றும் 19 ஆகிய திகதிகளில் ‘நெப்டியூன்’ (Neptune) ஏவுகணைகள் மூலம் இரயில் பாதைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதை அடுத்து, இரயில் சேவையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் முற்றிலும் உக்ரைனின் உள்நாட்டு ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பத்தைக் கொண்டே நடத்தப்பட்டதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் யெவ்ஹென் க்மாரா (Yevhen Khmara) தெரிவித்துள்ளார்.
