தமிழ்நாடு – திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனுமதியளித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றுள்ளார்.
எதிர்வரும் 24ஆம் திகதி மகா கார்த்திகை தீபத் திருநாளன்று குறித்த தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளதாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வாக்கு வங்கி அரசியலுக்காகத் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதைத் தடுக்க திமுகவும் தமிழக வெற்றிக் கழகமும் மேற்கொண்ட முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தத் தீர்ப்பின் மூலம் பல ஆண்டுகளாக முருக பக்தர்களின் மனதில் இருந்த கவலையும், பக்தர்களின் ஏக்கமும் நீங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“மத நல்லிணக்கம் என்ற பெயரில் இந்துக்களின் அடையாளங்களை அழிக்க முயன்றவர்களின் சதித்திட்டங்களை முறியடிக்கும் வகையில், மதவாத அரசியலுக்கு எதிராக வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பை வாசித்த உடனேயே தனது கண்கள் கலங்கிவிட்டன,” எனத் தனது அறிக்கையில் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
வழிபாட்டு உரிமைகளுக்காக நீதிமன்றங்களில் தொடர்ந்து போராடிய அனைவருக்கும், ஒரு அரசியல் தலைவராக அல்லாமல் முருக பக்தனாகத் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
