அமெரிக்காவில் நேற்று நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளான பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை ஆகிய இரண்டிலும் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையைப் பெற்றுள்ளன.
435 உறுப்பினர்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபையின் அனைத்து ஆசனங்களுக்கும், 100 உறுப்பினர்களைக் கொண்ட செனட் சபையில் 35 ஆசனங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டிலிருந்த பல முக்கிய ஆசனங்களை ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது.
குறிப்பாக டெக்சாஸ், கன்சாஸ், ஓஹியோ, அயோவா, தெற்கு கரோலினா உள்ளிட்ட குடியரசுக் கட்சியின் ஆதிக்கம் காணப்பட்ட மாநிலங்களிலும் ஜனநாயகக் கட்சி வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.
குறிப்பாக கன்சாஸ் மாநிலத்தில் சுமார் ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர் ஜனநாயகக் கட்சி செனட் ஆசனமொன்றைக் கைப்பற்றியுள்ளது.
இந்தத் தேர்தல் முடிவுகள் டொனால்ட் ட்ரம்பின் அரசியல் கொள்கைகள் மீதான மக்களின் அதிருப்தியை வெளிப்படுத்துவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
குறிப்பாக அமெரிக்காவில் அதிகரித்த வாழ்க்கைச் செலவு, பணவீக்கம், எரிபொருள் விலை உயர்வு, ஈரான் போர் மற்றும் ட்ரம்ப் நிர்வாகத்தின் வர்த்தக வரிக் கொள்கைகள் ஆகியவை தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தேர்தலுக்குப் பின்னரான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, இந்தத் தேர்தல் வெற்றி ஜனநாயகக் கட்சிக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய அதிகாரத்தை வழங்கியுள்ளது.
இதன் மூலம் ட்ரம்ப் நிர்வாகத்தின் சட்டமூலங்களை எதிர்ப்பதற்கும், அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கும், முக்கிய அரச நியமனங்களைத் தடுத்து நிறுத்துவதற்கும் ஜனநாயகக் கட்சிக்கு அதிக வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
இதேவேளை, தேர்தல் தோல்விகள் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ட்ரம்ப், குடியரசுக் கட்சியின் வேட்பாளர்கள் தங்களது தேர்தல் பிரசாரங்களில் சிறப்பாகச் செயற்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளதுடன், தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொண்டு ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
