அமெரிக்காவின் டெலவெயர் (Delaware) மாகாணம் முதல் கனடாவின் மொன்றியல் (Montreal) நகரம் வரை பரந்த பிராந்தியத்தினை அதிரச் செய்த விண்கல் வீழ்ச்சி குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வடஅமெரிக்காவின் வடகிழக்கு பிராந்திய வான்பரப்பிலேயே இந்த விண்கல் (Meteor) பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது.
அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மற்றும் நியூ ஹாம்சயர் மாநில எல்லைப் பகுதியில் நிகழ்ந்த இந்த விண்வெளி நிகழ்வின் போது, ஏற்பட்ட அதிரடி இரட்டை வெடிச்சத்தம் அப்பகுதி நிலப்பரப்பை உலுக்கியதோடு பல மாநிலங்களில் உள்ள கட்டடங்களையும் அதிரச் செய்துள்ளது. இந்த விபரீத வான்வெடிப்பானது சுமார் 300 தொன் டிஎன்டி (TNT) வெடிபொருளுக்கு இணையான ஆற்றலை வெளிப்படுத்தியதாக, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா (NASA) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த வெடிப்பின் போது உருவான அதிர்வலைகளால் (Sonic Booms) வீடுகள், வணிக வளாகங்கள் முதலானவை குலுங்கியுள்ளன. பகல் நேரத்தில் நிகழ்ந்த இந்த அரிய எரிகல் வீழ்ச்சி மற்றும் அதிர்வுகள், மொன்றியல் (Montreal) நகரத்தையும் பாதித்துள்ளன. இந்த எரிகல் வான்பரப்பில் மணித்தியாலமொன்றுக்கு சுமார் 120,700 கிலோமீற்றர் என்ற கடும் வேகத்தில் பயணித்துள்ளது. பூமிக்கு மேலே சுமார் 60 கிலோமீற்றர் உயரத்தில் வளிமண்டல அழுத்தத்தின் காரணமாக இது துண்டு துண்டாக உடைந்து சிதறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


