யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை 26ஆவது வாரமாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலிட்டி பகுதியில் அமைந்துள்ள இராணுவத்தினரின் “கொமாண்டோ” பங்களாவுக்கு முன்பாக, கடும் மழைக்கு மத்தியிலும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வலி. வடக்கின் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள், 1990ஆம் ஆண்டு ஜூன் மாத காலப்பகுதியில் தமது சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, குறித்த பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து வருகின்றன.
யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், குறித்த பகுதிகளில் இருந்து பாதுகாப்புத் தரப்பினர் வெளியேறாததால், தமது காணிகளை மீளப்பெற முடியாத நிலை தொடர்வதாகக் காணி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், தமது காணிகளை விடுவிக்குமாறு பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வரும் மக்கள், காணிகள் விடுவிக்கப்படாததைத் தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானித்திருந்தனர்.
அதற்கமைய, இன்று 26ஆவது வாரமாகவும், மழையையும் பொருட்படுத்தாது தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
