யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த 11.23 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான ஆவணங்கள் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளன.
குறித்த ஆவணங்கள், பலாலி பாதுகாப்புப் படைகளின் சிவில் விவகாரங்களுக்கான சிரேஷ்ட அதிகாரி கேர்ணல் W.M.A.M. நிசங்கவினால், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபனிடம் மாவட்டச் செயலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டன.
இதற்கமைய, வலிகாமம் வடக்கு – தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவில் 1.29 ஏக்கர் காணிகளும், நல்லூர் பிரதேச செயலகப் பிரிவில் 5.06 ஏக்கர் காணிகளும், வடமராட்சி கிழக்கு – மருதங்கேணி பிரதேச செயலகப் பிரிவில் 4.88 ஏக்கர் காணிகளுமாக மொத்தம் 11.23 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான ஆவணங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையின் மூலம், யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த குறித்த காணிகளை விடுவிப்பதற்கான உத்தியோகபூர்வ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
