இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், மொன்றியல் நகரிலுள்ள யூத சமூகத்தினர் ”ஒக்டோபர் 7” தாக்குதலின் மூன்றாம் ஆண்டு நிறைவு நினைவேந்தல் நிகழ்வை நடத்தியுள்ளனர்.
கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 251 பேர் பணயக்கைதிகளாக கடத்திச் செல்லப்பட்டனர்.
இச்சம்பவம் இடம்பெற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், மொன்றியலில் உள்ள ‘ஜெல்பர் மாநாட்டு மையத்தில்’ (Gelber Conference Centre) இந்த நினைவஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
‘ஃபெடரேஷன் சி.ஜே.ஏ’ (Federation CJA) மற்றும் மொன்றியல் யூத சமூக அமைப்புகள் இணைந்து நடத்திய இந்நிகழ்வில், உயிரிழந்தவர்களின் நினைவாக மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு, ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், சிறப்பு பிரார்த்தனைகளும் இசை அஞ்சலியும் இடம்பெற்றன.
காசா எல்லையை ஒட்டியுள்ள தெற்கு இஸ்ரேலின் ‘கிப்புட்ஸ் நிரீம்’ (Kibbutz Nirim) விவசாயப் பகுதியில் தாக்குதல் இடம்பெற்றபோது, அப் பகுதியைப் பாதுகாக்க உதவிய லீ ரஹாவ் (Lee Rahav) என்பவர், தாம் எதிர்கொண்ட நேரடி அனுபவங்களை இந்நிகழ்வில் பகிர்ந்துகொண்டார்.
அத்துடன், மொன்றியல் நகரத்திற்கும் ‘கிப்புட்ஸ் நிரீம்’ பகுதிக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பை வெளிப்படுத்தும் வகையில் காணொளிப் பதிவுகள் திரையிடப்பட்டதுடன், இஸ்ரேலில் நிறுவுவதற்காக, சமூகம் சார்ந்த மொசைக் கலைப்படைப்பு ஒன்றும் இதன்போது உருவாக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது.

