ஒட்டாவா நகரிலுள்ள கத்தோலிக்க பாடசாலை வாரியத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர், தனது மாணவர் ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒட்டாவா கத்தோலிக்க பாடசாலை வாரியத்தில் (OCSB) ஆசிரியையாகப் பணியாற்றும் 52 வயதான நான்சி லெஸ்கார்பியோ (Nancy Lescarbeau) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக ஒட்டாவா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாகவே இவர் மீது எட்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
பாலியல் துஷ்பிரயோகம், சட்டவிரோதமாக அடைத்து வைத்தல், வன்முறை அச்சுறுத்தல் மூலம் பயமுறுத்துதல், ஆயுதத்தைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தல் மற்றும் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு எதிரான பாலியல் தலையீடு (sexual interference) உள்ளிட்ட பல கடுமையான குற்றச்சாட்டுகள் இதில் அடங்குகின்றன.
கடந்த மாதம் கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் விசாரணைகளைத் தொடங்கிய ஒட்டாவா காவல்துறையினர், தற்போது இவரைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இவரால் மேலும் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுவதாகவும், இது தொடர்பில் தகவல் அறிந்த பொதுமக்கள் காவல்துறையின் பாலியல் குற்றங்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத் தடுப்புப் பிரிவையோ அல்லது குற்றத்தடுப்புப் பிரிவையோ தொடர்புகொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.

