கியூபெக் மாகாணத்தில் புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான மாகாணத் தேர்தல் வாக்கெடுப்பு இன்று இடம்பெறுகிறது.
மாகாணத்தின் அரசியல் எதிர்காலத்தையும், அடுத்த ஆட்சியை அமைக்கப்போவது யார் என்பதையும் தீர்மானிக்க கியூபெக் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
மாகாணம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகள் காலை 9:30 மணிக்குத் திறக்கப்பட்டன.
மக்களின் வாக்களிப்புக்காக, இந்த வாக்குச்சாவடிகள் இரவு 8:00 மணி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது,
தொழிலாளர்களும் ஊழியர்களும் சிரமமின்றி வாக்களிப்பதற்கு வசதியாக, நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்குச் சம்பளக் குறைப்போ அல்லது பிற தண்டனைகளோ இன்றி, குறைந்தபட்சம் தொடர்ந்து நான்கு மணிநேர அவகாசம் வழங்க வேண்டும் என்பது சட்டபூர்வ விதியாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு உதவுவதற்காக, கியூபெக் தேர்தல் திணைக்களம் (Élections Québec) பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
இம்முறை கியூபெக்கின் புதிய மொழிக் கொள்கையான ‘சட்டம் 96’ (Bill 96) அமலில் உள்ளதால், ஆங்கில மொழியில் சேவைகளைப் பெறுவதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு ஆங்கிலத்தில் தகவல்களை வழங்குவதற்கு முன்னர், அவர்களுக்கு ஆங்கிலத்தில் தொடர்புகொள்வதற்கான உரிமை உள்ளதா என்பதை உறுதிப்படுத்துமாறு தேர்தல் அதிகாரிகளுக்கு வழிகாட்டல் வழங்கப்பட்டுள்ளது.
இன்று இரவு வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் வாக்குகள் எண்ணப்பட்டு முடிக்கப்படவுள்ளன.
அதன் பின்னர், கியூபெக் மாகாணத்தில் புதிய அரசாங்கத்தை அமைக்கும் கட்சி எது என்பது குறித்த முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத் தக்கது.

