உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட J/85 நாவாந்துறை வடக்கு கிராம அலுவலர் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு புதிய வீடுகள், பயனாளிகளிடம் இன்றைய தினம் சனிக்கிழமை கையளிக்கப்பட்டன.
நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சினால் 2026ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இவ்வீடுகளை, கடற்றொழில்அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர், பயனாளிகளிடம் புதிய வீடுகளுக்கான உரிமை மற்றும் சாவிகளை கையளித்ததுடன், அவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளையும் கேட்டறிந்துகொண்டார்.
இதனைத் தொடர்ந்து, அதே பகுதியில் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் மற்றுமொரு வீட்டையும் அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்.
அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் நிர்மாணப் பணிகளின் தற்போதைய நிலைமையை அவதானித்த அவர், பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிறைவு தொடர்பான விடயங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்துகொண்டார்.
2026ஆம் ஆண்டுக்கான வீடமைப்புத் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணம் பிரதேச செயலகப் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட ஒன்பது பயனாளிகளுக்கு தலா 20 இலட்சம் ரூபா பெறுமதியான வீடமைப்புத் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் மூலம், வீட்டு வசதி தேவைப்படும் குடும்பங்களுக்கு பாதுகாப்பான மற்றும் கண்ணியமான வாழ்விடத்தை ஏற்படுத்திக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

