நாட்டின் கடலோரப் பகுதிகள் மற்றும் கடல்சார் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில், $1.2 பில்லியன் கனடிய டொலர் மதிப்பிலான பாரிய நிதியுதவித் திட்டத்தை பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் நார்த் வென்கூவர் நகரில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரைநிகழ்த்தியபோதே, பிரதமர் மார்க் கார்னி இப்புதிய கொள்கை அறிவிப்பை வெளியிட்டார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் அதேவேளையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் உறுதி செய்வதே அரசின் முதன்மை இலக்கு என, பிரதமர் மார்க் கார்னி தனது உரையில், குறிப்பிட்டார்.
2030 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் கடல் மற்றும் கடலோரப் பகுதிகளில் 30 சதவீதத்தைப் பாதுகாக்கப்பட்ட மண்டலங்களாக மாற்றுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் 1 சதவீதமாக இருந்த பாதுகாக்கப்பட்ட கடல் பகுதி தற்போது 15 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
அடுத்த நான்கு ஆண்டுகளில் கடல்வாழ் உயிரினங்கள், திமிங்கலங்கள் மற்றும் சால்மன் மீன் வகைகளைப் பாதுகாப்பதற்காக $740 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வடக்குக் கரைப் பிராந்தியப் பாதுகாப்பிற்காகவும், பழங்குடியின மக்களின் பங்களிப்புடன் கூடிய கடல்சார் நிர்வாகத்தை வலுப்படுத்தவும் $186 மில்லியன் டொலர் நிதி வழங்கப்படவுள்ளது.
எதிர்வரும் மே மாதம் கனடா தலைமை தாங்கி நடத்தவுள்ள 12 ஆவது சர்வதேச ‘எங்கள் பெருங்கடல் மாநாட்டின்’ (Our Ocean Conference) முன்னோடியாக இத்திட்டம் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
