கியூபெக் மாகாணத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள பல பில்லியன் டொலர் மதிப்பிலான சர்ச்சில் ஃபோல்ஸ் (Churchill Falls) நீர்மின் சக்தி மற்றும் சுத்தமான ஆற்றல் பகிர்வுக்கான ஆரம்பக்கட்ட ஒப்பந்தத்திற்கு, நியூபவுண்ட்லேண்ட் மற்றும் லேப்ரடோர் மாகாணச் சட்டசபை குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தனது ஆதரவை வழங்கியுள்ளது.
அந்த மாகாண சட்டசபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில், ஒப்பந்தத்திற்கு ஆதரவாக 21 வாக்குகளும், எதிராக 18 வாக்குகளும் பதிவாகின.
ஆளும்கட்சியான புரோகிரசிவ் கன்சர்வேடிவ் (PC) கட்சியின் 20 உறுப்பினர்களும், ஒரு சுயேச்சை உறுப்பினரும் சேர்ந்து, ஒப்பந்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
நியூபவுண்ட்லேண்ட் மற்றும் லேப்ரடோர் மாகாணச் சட்டசபையில் நான்கு நாட்களாக நடைபெற்ற நீண்ட விவாதத்திற்குப் பின்னரே, இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பிரதமர் மார்க் கார்னி இந்த நீர்மின் சக்தித் திட்டத்தை “வட அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய தூய்மையான ஆற்றல் முதலீடு” என வர்ணித்துள்ளதோடு, மத்திய அரசின் சார்பில் 10 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.


