ஜனநாயக உரிமைகளை விட பிரெஞ்சு மொழி அரசியலுக்கு முன்னுரிமை அளிப்பதை நிறுத்துமாறு ஆளுங்கட்சியான கோஅலிஷன் அவனீர் கியூபெக் (CAQ) தலைவரும் கியூபெக் மாகாண முதலமைச்சருமான கிறிஸ்டின் ஃபிரஷெட்டிடம் (Christine Fréchette) கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
கியூபெக் லிபரல் கட்சித் தலைவர் சார்ள்ஸ் மில்லியார்ட் (Charles Milliard) இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார். கியூபெக்கின் கடுமையான பிரெஞ்சு மொழிச் சட்டமான பில் 96 (Bill 96) இன் விதிகளுக்கு அமைவாக, ஆங்கில வாக்காளர்களுக்கு இருமொழிகளிலான தேர்தல் நினைவூட்டல் அட்டைகளை அனுப்ப முடியாது என, கியூபெக் மாகாண அரசு காண்பிக்கும் பிடிவாதப்போக்கு குறித்து கருத்து வெளியிட்ட போதே, சார்ள்ஸ் மில்லியார்ட் இக்கருத்தைத் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய லிபரல் கட்சித் தலைவர் சார்ள்ஸ் மில்லியார்ட், வாக்காளர்கள் எங்கு, எப்போது, எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்ற அடிப்படைத் தகவல்களை அவர்கள் புரிந்துகொள்ளும் மொழியில் வழங்குவது, ஓர் அரசின் ஜனநாயகக் கடமையாகும் எனக் குறிப்பிட்டார்.
பிரெஞ்சு மொழியைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது என்பதில் சந்தேகமில்லை என்று கூறிய அவர், ஆனால், அதனைச் சாக்குப்போக்காக வைத்து சிறுபான்மை ஆங்கில சமூகத்தினரின் ஜனநாயக வாக்களிக்கும் உரிமையைப் பறிக்கக் கூடாது என்று, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தேர்தல் வழிகாட்டிகளை ஆங்கிலத்திலும் அச்சிட்டு வழங்குவது பிரெஞ்சு மொழியின் இறையாண்மையை எந்த வகையிலும் வீழ்ச்சியடையச் செய்யாது என்றும் சார்ள்ஸ் மில்லியார்ட், தெரிவித்துள்ளார்.


