மொன்றியல் நகரிலுள்ள கியூபெக் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் (Mila) அலுவலகம் மற்றும் அதன் அருகிலுள்ள மென்பொருள் நிறுவன கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மேலும் அங்கு, செயற்கை நுண்ணறிவுக்கு (AI) எதிரான சுவரெழுத்துக்களும் வரையப்பட்டுள்ளதாக மொன்றியல் நகர பொலிஸார் (SPVM)
தெரிவித்துள்ளனர்.
மொன்றியலின் ரோஸ்மாண்ட்-லா பெட்டிட்-பட்ரி (Rosemont-La Petite- Patrie) பகுதியில் உள்ள செயிண்ட்-உர்பைன் தெருவில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மொன்றியல் நகர பொலிஸ் அதிகாரிகளே, கட்டிடத்தின் பல ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருப்பதையும் சுவர்களில் சுவரெழுத்துக்கள் வரையப்பட்டிருப்பதையும் கண்டறிந்தனர்.
தாக்கப்பட்ட கட்டிடங்களின் சுவர்களில் டேட்டா சென்டர்களை எரியுங்கள்
(Burn the Data Centers) என்பது போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு எதிரான வாசகங்கள் தெளிக்கப்பட்டிருந்தன.
Mila ஆராய்ச்சி மையத்தின் கண்ணாடிகளுடன், அருகில் அமைந்துள்ள ServiceNow என்ற மென்பொருள் நிறுவனத்தின் கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்துடன் சுமார் 10 பேர் கொண்ட கும்பலுக்குத் தொடர்பிருப்பதாகப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவ இடத்திற்கு அருகில் வைத்து 25 வயதுடைய பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நாட்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப மாநாடுகளில் ஒன்றான All In செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாடு இன்றைய தினம் மொன்றியலில் ஆரம்பமாகியுள்ள நிலையிலேயே, இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 6,500க்கும் மேற்பட்ட உலகளாவிய செயற்கை நுண்ணறிவு நிபுணர்கள் மற்றும் வர்த்தகப் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.
Mila நிறுவனத்தின் நிறுவனரும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற கணினி விஞ்ஞானியுமான யோசுவா பெஞ்சியோ (Yoshua Bengio) மற்றும் ServiceNow நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிப் பிரிவின் துணைத் தலைவர் வலேரி பெகார்ட் (Valérie Bécaert) ஆகியோர் இம்மாநாட்டில் முதன்மை உரையாற்றவுள்ள நிலையில், அவர்களின் நிறுவனங்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருவதுடன், மொன்றியல் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


