மொன்றியல் நகரிலுள்ள ‘ப்ளேட்டோ-மொன்-ரோயல்’ (Plateau-Mont-Royal) பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற கொலையில், தொடர்புடைய எரோ சவாடோகோ (Yero Savadogo) என்பவர் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
23 வயதான அலெக்சாண்டர் வட்டமானு சலாமன்கா (Alexandre Vatamanu Salamanca) என்பவரைக் கொலை செய்த வழக்கில், முதலில் எரோ சவாடோகோ மீது இரண்டாம் நிலை கொலைக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இருப்பினும், கியூபெக் உயர் நீதிமன்ற நீதிபதி அலெக்சாண்டர் பியென்-அமே (Alexandre Bien-Aimé) முன்னிலையில் நடைபெற்ற விசாரணையின் போது, குற்றச்சாட்டு சாமானிய கொலைக் குற்றமாக குறைக்கப்பட்டதை அடுத்து, அவர் தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டார்.
2024 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற இச்சம்பவத்தின் பின்னணி குறித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளின்படி, மூன்று வெவ்வேறான குழுக்களுக்கு இடையே சமூக ஊடகங்களில் (Social Media) எழுந்த சிறு தகராறே, இந்த வன்முறைக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
சமூக ஊடக மோதல் முற்றிய நிலையில், ‘ப்ளேட்டோ-மொன்-ரோயல்‘ பகுதியிலுள்ள ஒரு கட்டிடத்தின் வாகன நிறுத்துமிடத்தில் இக்குழுக்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த மோதலில் கத்திகளுடன் கூடிய குழுத் தாக்குதலில் ஈடுபட்டதாக எரோ சவாடோகோ ஒப்புக்கொண்டுள்ளார்.
சவாடோகோ, பாதிக்கப்பட்டவரை இருமுறை கத்தியால் குத்திய போதிலும், அது மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தான தாக்குதலாக இருக்கவில்லை என்பது கண்டறியப்பட்டது.
தற்போது, குற்றத்தை ஒப்புக்கொண்ட எரோ சவாடோகோவுக்கு சுமார் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

