புதிய ஜனநாயகக் கட்சியின் (NDP) புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆவி லூயிஸ் (Avi Lewis), கட்சியின் அடித்தளத்தை பலப்படுத்தும் நோக்கில் டொராண்டோ பிராந்தியத்தில் வெறுமையாகவுள்ள நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளைப் பரிசீலித்து வருகிறார்.
கடந்த தேர்தலில் கட்சி சந்தித்த கடுமையான சரிவுக்குப் பிறகு, நாட்டின் முக்கிய நகர்ப்புற மையங்களில் கட்சியின் செல்வாக்கை மீண்டும் கட்டியெழுப்புவதே தங்களின் முதன்மை இலக்கு என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புதிய ஜனநாயகக் கட்சியின் (NDP) கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்திற்கு வெளியே இருந்து கட்சியை ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்த லூயிஸ், தற்போது இடைத்தேர்தல் மூலம் நாடாளுமன்றப் பிரவேசத்தைச் செய்யத் திட்டமிட்டுள்ளார்.
குறிப்பாக, டொராண்டோ பகுதியில் வலுவான அடித்தளத்தை உருவாக்குவது, எதிர்வரும் பொதுத்தேர்தலில் கட்சியின் வெற்றியைத் தீர்மானிக்கும் என அவர் நம்புவதாக தகவல்கள் வெளிவந்துள்ளார். கனடிய நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வ கட்சி அந்தஸ்தை எட்ட முடியாமல் ஐந்து உறுப்பினர்களுடன் மட்டுமே இயங்கி வரும் புதிய ஜனநாயகக் கட்சி, ஆவி லூயிஸின் தலைமையில் புதிய அரசியல் வழியை நோக்கி நகர்ந்து வருகிறது.
இடதுசாரி மற்றும் சமூக ஜனநாயகக் கொள்கைகளை முதன்மைப்படுத்திப் பிரச்சாரம் செய்து வரும் லூயிஸ், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி உயர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொதுத்துறைச் சேவைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றைத் தங்களது முதன்மை நிகழ்ச்சி நிரலாக முன்வைத்துள்ளார்.
டொராண்டோ தொகுதியில் போட்டியிடுவதன் மூலம் தொழிலாளர்களின் வாக்குகளை மீண்டும் பெற முடியும் என்றும், ஆளும் லிபரல் கட்சி மற்றும் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்கு இணையான ஒரு வலுவான மாற்றாகத் தங்களை உயர்த்திக் கொள்ள முடியும் என்றும் புதிய ஜனநாயகக்
கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் எதிர்பார்க்கின்றமை குறிப்பிடத் தக்கது.

