இலங்கையர்களுக்கு வழங்கி வந்த விசா அற்ற (Visa-free) பிரவேசச் சலுகையை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் தாய்லாந்து அரசாங்கம் ரத்து செய்ய தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்தில் சில இலங்கையர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதே இந்தத் தீர்மானத்திற்கு பிரதான காரணம் என அவர்
சுட்டிக்காட்டியுள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று உரையாற்றிய போதே அமைச்சர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்தார். தாய்லாந்தில் இலங்கையர்கள் சிலர் அண்மைய காலத்தில் பல்வேறு சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்த அமைச்சர், குறிப்பாக தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருட்களைக் கடத்துதல் மற்றும் பௌத்த துறவிகள் சிலர் சட்டவிரோதப் பொருட்களுடன் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் என்பனவும் இந்த விசா கட்டுப்பாட்டிற்கு வழிவகுத்துள்ளதாக விவரித்தார்.
இதன் காரணமாக, விசா அற்ற பிரவேசச் சலுகை இரத்து செய்யப்படும் நாடுகளின் பட்டியலில் இலங்கையையும் தாய்லாந்து அரசாங்கம் உள்ளடக்கியுள்ளது. இலங்கைக்கான தாய்லாந்து தூதரகத்தின் உறுதிப்படுத்தலின்படி, 15 ஆம் திகதிக்குப் பின்னர் தாய்லாந்திற்குப் பயணம் செய்யும் அனைத்து இலங்கையர்களும் புறப்படுவதற்கு முன்னர் விசா பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், 14 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தாய்லாந்திற்குச் செல்லும் இலங்கையர்கள் பழைய நடைமுறையின் கீழ் பயணிக்க அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து தாய்லாந்து அதிகாரிகளுடன் இலங்கை அரசாங்கம் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கும் இடையே விசா வசதிகள் தொடர்பான இருதரப்பு ஒப்பந்தம் (Bilateral agreement) ஒன்றை எட்டுவதற்கு முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் குடிவரவு குடியகல்வு திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் இணைந்து இந்த ஒப்பந்தத்திற்கான வரைவை தயாரிக்கும்
பணிகளில் ஈடுபட்டுள்ளன.

