பாலஸ்தீனத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைப் (West Bank) பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள இஸ்ரேலியக் குடியிருப்புகளில்
இருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் இறக்குமதி மற்றும் வர்த்தகத்திற்குத் தடை விதிக்கப் போவதாகக் கனடா, பிரித்தானியா மற்றும்
பிரான்ஸ் ஆகிய நாடுகள் கூட்டாக அறிவித்துள்ளன.
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் இஸ்ரேலியக் குடியிருப்புகள் விரிவுபடுத்தப்படுவதைக் கண்டித்தும், குடியேற்றவாசிகளின் வன்முறைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இங்கிலாந்து பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் எட் மிலிபாண்ட் (Ed Miliband), "சட்டவிரோதக் குடியிருப்புகளில்
இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குத் தடை விதிக்கப்படும்.” எனவும் “பிரித்தானியாவுடன் இணைந்து கனடாவும் பிரான்ஸும் இந்தத்
தடைகளை விதிக்கவுள்ளன என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
வர்த்தகத் தடையை விட ஒரு படி மேலே சென்றுள்ள பிரித்தானிய அரசு, மேற்குக் கரையில் இஸ்ரேலியக் குடியிருப்பு விரிவாக்க நடவடிக்கைகளுக்கு
ஆதரவளிக்கும் கட்டுமானம், உள்கட்டமைப்பு, நிதி மற்றும் ரியல் எஸ்டேட் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது புதிய இலக்கு வைக்கப்பட்ட
தடைகளை (Targeted Sanctions) விதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
மேற்குக் கரையின் எனப்படும் உணர்திறன் மிக்க பகுதியில் 1,200 புதிய குடியிருப்பு வீடுகளைக் கட்டுவதற்கான ஏலங்களை இஸ்ரேல் அண்மையில்
திறந்ததே இந்த கடுமையான நடவடிக்கைக்கு உடனடிக் காரணமாக அமைந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராகக் குடியேற்றவாசிகளால் மேற்கொள்ளப்படும் வன்முறைகள் இனச்சுத்திகரிப்புக்கு (Ethnic Cleansing) ஒப்பானவை என்றும் எட்
மிலிபாண்ட் குற்றம்சாட்டியுள்ளார்.

