கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்காவில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் (Midterm Elections) கனடாவுடனான வர்த்தகக் கொள்கைகள் முக்கிய தேர்தல் காரணியாக உருவெடுத்துள்ளன.
குறிப்பாக, அமெரிக்க வாகன உற்பத்தியின் மையப்பகுதியாகவும், கனடாவின் மிக முக்கிய வர்த்தகப் பங்காளியாகவும் திகழும் மிச்சிகன் மாநிலத்தில் (Michigan), அதிகரித்துவரும் வர்த்தக வரிகள் மற்றும் பொருட்களின் விலை உயர்வுக்குப் பொறுப்பேற்பது யார் என்பது குறித்து, அமெரிக்காவின் குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சியினரிடையே தீவிர கருத்து மோதல்கள் வெடித்துள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த வரிகளுக்கும், அதற்குப் பதிலடியாகக் கனடா நடைமுறைப்படுத்தியுள்ள டொலருக்கு டொலர் (dollar-for-dollar) இறக்குமதி வரிகளுக்கும் மத்தியில், மிச்சிகன் மாநிலத்தின் வாக்காளர்கள் மற்றும் வணிகத் துறையினர் கடும் பொருளாதார அழுத்தத்தைச் சந்தித்து வருகின்றனர்.
எதிர்வரும் அமெரிக்க இடைத்தேர்தலில் மிச்சிகன் மாநில செனட்டர் மற்றும் பிரதிநிதிகள் சபை இடங்களைக் கைப்பற்ற இரு கட்சிகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள், அதிபர் டிரம்பின் ஒருதலைப்பட்சமான வரி விதிப்புக் கொள்கைகளே மிச்சிகனின் வாகனத்
துறை, விவசாயம் மற்றும் உற்பத்தித் துறைகளுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
கனடாவின் பதிலடி வரிகளால் மிச்சிகன் மாநிலத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தொழில்துறை பாகங்கள், எஃகு, மற்றும் பிற பொருட்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதி மக்களின் வீட்டின்கீழ் ஏற்படும் வரிச் செலவுச் சுமை (Per-household tariff cost) அமெரிக்காவிலேயே மிச்சிகனில் தான் மிக
அதிகமாக உள்ளதாகப் புதிய ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
இதனை முன்னிறுத்தி, அமெரிக்காவில் குடியரசுக் கட்சியின் பொருளாதாரக் கொள்கைகளை ஜனநாயகக் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத் தக்கது.

