அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கனடா மீது விதிக்கப்பட்டுள்ள 50 சதவீத சுங்கவரி உயர்வால் பெரும் பொருளாதார பாதிப்புகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டாலும், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காகப் பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறிய பிரதமர் மார்க் கார்னியின் (Mark Carney) முடிவுக்குக் கனடிய மக்களும் தொழில் முனைவோரும் பரவலான ஆதரவை வெளியிட்டு வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் முன்வைத்த “ஏற்றுக்கொள்ள முடியாத” நிபந்தனைகள் காரணமாக, கனடாவின் பேச்சுவார்த்தைக் குழுவை ‘நாடு திரும்புமாறு பிரதமர் மார்க் கார்னி உத்தரவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, சுமார் 28 பில்லியன் டொலர் மதிப்பிலான கனடிய ஏற்றுமதிப் பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீத புதிய சுங்கவரியை உடனடியாக அமல்படுத்தியது.
அமெரிக்காவின் இந்த முடிவுக்குப் பதிலடியாக, செப்டம்பர் மாதம் உழைப்பாளர் தினத்திற்குப் (Labour Day) பிந்தைய செவ்வாய் முதல் அமெரிக்கப் பொருட்கள் மீது ‘டொலருக்கு டொலர்‘ என்ற அடிப்படையில் ’பதில் சுங்கவரி’ விதிக்கப்படும் என்று கனடாவின் பிரதமர் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், உள்நாட்டு uஉடகமொன்று மேற்கொண்ட கருத்துக்கணிப்புகள் மற்றும் பொதுமக்களின் எதிர்வினைகளின் படி, பெரும்பான்மையான கனடியர்கள் பிரதமர் காரினியின் நிலைப்பாட்டை ஆதரிக்கின்றனர் எனத் தெரிய வந்துள்ளது.
“அமெரிக்காவின் நியாயமற்ற கோரிக்கைகளுக்குப் பணிந்து ஒரு மோசமான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை விட, பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறியதே சரியானது” எனப் பலரும் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இந்த வரிப் போரினால் நாட்டில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் உயரும் என 89 சதவீத கனடியர்கள் கவலை வெளியிட்டுள்ளதுடன், சுமார் 38 சதவீதமானோர் வேலை வாய்ப்புகளை இழக்க நேரிடும் என்ற அச்சத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

