கியூபெக் மாகாணத்தில் எதிர்வரும் பொதுத்தேர்தலை இலக்காகக் கொண்டு, மாகாணத்தின் ஆங்கில மொழி பேசும் (Anglophone) சமூகத்தினருடனான தொடர்பைப் பலப்படுத்தவும், இளைஞர்களின் தொழில் முனைவோரை ஊக்குவிக்கவும் கியூபெக் லிபரல் கட்சி (PLQ) புதிய சலுகைகளையும் வாக்குறுதிகளையும் அறிவித்துள்ளது.
கியூபெக் லிபரல் கட்சியின் இளைஞர் பிரிவின் 44-வது வருடாந்த இளைஞர் மாநாடு (Youth Convention) செயிண்ட்-லம்பேர்ட் (Saint-Lambert) பகுதியில் நடைபெற்றது.
இம்மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய கட்சியின் தலைவர் சார்ல்ஸ் மிலியார்ட் (Charles Milliard), இளைஞர்கள் மற்றும் ஆங்கில மொழிச் சமூகத்தினரைக் கவரும் வகையிலான முக்கிய கொள்கை அறிவிப்புகளை வெளியிட்டார்.
மாகாணத்தில் அண்மைக் காலமாக மொழி மற்றும் கலாச்சார உரிமைகள் தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்துள்ள சூழலில், பாரம்பரியமாக லிபரல் கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த ஆங்கில மொழி பேசும் சமூகத்தினரை மீண்டும் கட்சியின் பக்கம் ஈர்ப்பதற்கு சிறப்பு முக்கியத்துவம் அளிப்பதாக, அவர் தெரிவித்தார்.
சிறுபான்மை ஆங்கில மொழிச் சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதுடன், மாகாணத்தின் அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும் “அனைவரையும் உள்ளடக்கிய” (Inclusive) அரசியல் அணுகுமுறையை லிபரல் கட்சி முன்னெடுக்கும் என அவர் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.

