இராணுவப் போக்குவரத்து விமானங்களை, காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் தீயணைப்பு (Waterbombers) விமானங்களாக மாற்றியமைப்பதற்காக ‘கோல்சன் ஏவியேஷன்’ (Coulson Aviation) என்ற நிறுவனத்திற்கு விற்பனை செய்ய, மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
கனடிய ஆயுதப் படைகளால் (CAF) பயன்படுத்தப்பட்டு ஓய்வுபெற்ற 10 சி.சி-130ஹெச் ஹெர்குலஸ் (CC-130H Hercules) ரக, போக்குவரத்து விமானங்களே, காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் தீயணைப்பு (Waterbombers) விமானங்களாக, மாற்றியமைக்கப்படவுள்ளன.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் அபோட்ஸ்போர்ட் (Abbotsford) நகரில் நடைபெற்ற சர்வதேச விமானக் கண்காட்சியின் போது, பாதுகாப்பு அமைப்புகள் கொள்முதல் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் ஸ்டீபன் ஃபூர் (Stephen Fuhr) நிபந்தனையுடனான விற்பனை ஒப்பந்தத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், இராணுவச்சேவையிலிருந்து ஓய்வுபெற்ற விமானங்கள் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள போர்ட் அல்பெர்னி (Port Alberni) பகுதியில் அமைந்துள்ள கோல்சன் நிறுவனத்தின் தொழிற்கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, தீயணைப்புத் தேவைகளுக்கான அதிநவீன அமைப்புகளுடன் மாற்றியமைக்கப்படவுள்ளன.
ஒரு போக்குவரத்து விமானத்தை காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் தீயணைப்பு (Waterbombers) விமானமாக மாற்றியமைக்க சுமார் 20,000 மணிநேர மனித உழைப்பு தேவைப்படும் என்று, கோல்சன் ஏவியேஷன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வேன் கோல்சன் (Wayne Coulson) தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 12 மாதங்களுக்குள் அதாவது அடுத்த காட்டுத்தீ பருவகாலத்தினுள், மாற்றியமைக்கப்பட்ட முதலாவது விமானம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

