மெக்கா நகரில் சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இடையே கையெழுத்தான வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு ‘மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம்’ தொடர்பாக ஈரான் தனது கடுமையான அதிருப்தியையும் விமர்சனத்தையும் வெளியிட்டுள்ளது. துருக்கி மற்றும் பாகிஸ்தானுடன் சவுதி அரேபியா போட்டுக்கொண்ட இந்த ஒப்பந்தம் வெறும் “காகித ஒப்பந்தம்” மட்டுமே என்றும், இது ரியாத் நகரத்திற்கு எவ்வித நீடித்த பாதுகாப்பையும் வழங்காது என்றும் ஈரான் நாடாளுமன்றக் குழு எச்சரித்துள்ளது.
ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் கொள்கை ஆணையத்தின் மூத்த உறுப்பினரான இப்ராஹிம் ரெசாயி, இந்த ஒப்பந்தம் குறித்து தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையான கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார். அதில், பல ஆண்டுகளாக அமெரிக்காவிற்கு ஒருதலைப்பட்சமாக ஆதரவு அளித்து வந்த சவுதி அரேபியாவிற்கு அந்த ஆதரவு எத்தகைய பாதுகாப்பையும் தரவில்லை என்பதை நினைவுபடுத்திய அவர், தற்போது துருக்கி மற்றும் பாகிஸ்தான் நாடுகளுடன் போட்டுக்கொண்டுள்ள இந்த காகித ஒப்பந்தமும் அவர்களுக்கு உண்மையான பாதுகாப்பைத் தந்துவிடாது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், சவுதி அரேபியா தனது வெளியுறவுக் கொள்கைகளைச் சீரமைத்துக் கொண்டாலே போதுமானது என்றும், அப்படிச் செய்தால் தனது பாதுகாப்பிற்காக மற்ற நாடுகளிடம் ‘யாசிக்க வேண்டிய’ நிலைமை ஏற்படாது என்றும் அவர் காரசாரமாக விமர்சித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் பிராந்திய அளவில் தீவிரமடைந்து வரும் நிலையில், வளைகுடா பிராந்தியத்தின் பாதுகாப்புச் சூழல் பெரும் சவாலுக்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக, ஹார்முஸ் நீரிணை மற்றும் செங்கடல் வழியாகச் செல்லும் சர்வதேச வணிகக் கப்பல் போக்குவரத்திற்கு ஏற்பட்டுள்ள இடையூறுகள், பிராந்திய நாடுகளைத் தங்களின் பாதுகாப்பு உத்திகளை மறுபரிசீலனை செய்ய நிர்ப்பந்தித்துள்ளன. இதன் விளைவாகவே, இஸ்லாத்தின் புனித நகரமான மெக்காவில் சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி தலைவர்கள் ஒன்றிணைந்து “மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில்” கையெழுத்திட்டனர்.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த ஒப்பந்தத்தில் இணைந்துள்ள மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டால், அது மூன்று நாடுகள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகவே கருதப்படும். எந்தவொரு ஆக்கிரமிப்பிற்கும் எதிராகக் கூட்டுத் தடுப்பாற்றலை உருவாக்குவதே இதன் முதன்மை நோக்கம் எனக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த ஒப்பந்தம் பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தாது என்றும், வளைகுடா நாடுகளின் பாதுகாப்பை மேலும் சிக்கலாக்கும் என்றும் ஈரான் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


