கியூபெக் மாகாணத்தில் உள்ள புரோமொன்ட் (Bromont) பகுதியில் இரகசியமாக இயங்கிவந்த பிரம்மாண்ட போதைப்பொருள் தயாரிப்பு
ஆய்வகம் தொடர்பில், மூன்று நபர்கள் மீது உத்தியோகபூர்வமாகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகக் ‘ரோயல் கனடியன் மவுண்டட்
பொலிஸ்’ (RCMP) துறையினர் அறிவித்துள்ளனர்.
2024ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கப்பட்ட விரிவான விசாரணைகளைத் தொடர்ந்து, சட்டவிரோதமாக மெத்தம்பெட்டமைன் (Methamphetamine) மாத்திரைகளைத் தயாரித்தல், வைத்திருத்தல் மற்றும் கடத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் மூவரும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 24ஆம் திகதி கிரான்பி (Granby) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இக் குற்றவியல் கும்பல் தொடர்பில் 2024ஆம் ஆண்டு இலையுதிர்காலத்தில் விசாரணையைத் தொடங்கிய பொலிஸார், 2025 மே மாதம் புரோமொன்டில் உள்ள சிறிய சேமிப்புக் கிடங்கு (Warehouse) ஒன்றில் இயங்கிவந்த இந்த இரகசிய ஆய்வகத்தை முற்றுகையிட்டு முடக்கினர்.
இது மிகவும் சிக்கலான மற்றும் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட ஆய்வகம் என்று தெரிவித்துள்ள பொலிஸார், “இதனை
முழுமையாகக் கைப்பற்றிப் பாதுகாப்பாக முடக்குவதற்குப் பொலிஸாருக்கு சுமார் 7 நாட்கள் தேவைப்பட்டன” எனத் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய தரவுகளின்படி இப் போதைப்பொருள் உற்பத்தி வலையமைப்பானது, பிற சர்வதேச அல்லது பெரிய அளவிலான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுடன் நேரடித் தொடர்பு கொண்டிருந்ததற்கான சான்றுகள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை
என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


