கியூபெக் மாகாண சுகாதார அமைப்பான ‘சாந்தே கியூபெக்’ (Santé Québec) மீது கியூபெக் நகரைத் தளமாகக் கொண்ட ‘சொல்யூஷன்ஸ் பெட்டல்
இன்வெஸ்டிகேஷன்ஸ்’ (Solutions Petal Inc.) என்ற மென்பொருள் நிறுவனம் இழப்பீடு கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
தனது நோயாளி நேர ஒதுக்கீடு மற்றும் அட்டவணை மேலாண்மை
மென்பொருளை ‘சாந்தே கியூபெக்’ (Santé Québec) அமைப்பு போலியாக நகலெடுத்துப் பயன்படுத்தியதாகக் கூறியே, இந்த வழக்கினை அந்த
மென்பொருள் நிறுவனம் தாக்கல் செய்துள்ளது. 125 மில்லியன் முதல் 175 மில்லியன் கனேடிய டொலர் வரை இந்த இழப்பீடு கோரப்பட்டுள்ளது.
ரகசியக்காப்பு ஒப்பந்தத்தை மீறி, தங்களது பிரத்யேகத் தொழில்நுட்பத் திட்டத்தின் மூலக் குறியீட்டை (Source Code) மறுஉருவாக்கம் செய்து போலி மென்பொருளை உருவாக்கியதாக, சாந்தே கியூபெக் மற்றும் மாகாண சுகாதார அமைச்சு மீது பெட்டல் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
அத்துடன், தற்போதைய போலி மென்பொருளின் பயன்பாட்டை உடனடியாக நிறுத்த இடைக்காலத் தடையும் கோரப்பட்டுள்ளது. வழக்குத் தொடர்பான நீதிமன்ற ஆவணங்களின்படி, பெட்டல் நிறுவனம் 2010ஆம் ஆண்டில் ‘எல் ஓர்கெஸ்ட்ரேட்டர்’ (L’Orchestrateur) என்ற நோயாளி முன்பதிவு மென்பொருளை, சாந்தே கியூபெக்கிற்கு முதன்முதலில் வழங்கியது.
தொடர்ந்து 2020ஆம் ஆண்டில் கியூபெக் சுகாதார அமைச்சு இம்மென்பொருளைப் பயன்படுத்தும் காலவரையற்ற உரிமையைப்
பெற்றது. எனினும், அசல் அமைப்பைத் தவிர்த்துப் புதிய அமைப்பை உருவாக்கும் நோக்கில், பெட்டல் நிறுவனத்தின் மென்பொருளில் சில மாற்றங்களைச் செய்யுமாறு சாந்தே கியூபெக் கோரியுள்ளது.
பின்னர், அதே தொழில்நுட்பத்தைப் பிரதிபலிக்கும் வகையில் புதிய மூலக் குறியீட்டை உருவாக்கப் பகிரங்க ஏலக் கோரலை (Call for Tenders)
வெளியிட்டுள்ளது.
இதன் மூலம், கடந்த ஆறு ஆண்டுகளாகப் பெறப்பட்ட அனுபவத்தைப் பயன்படுத்தி தங்களது வர்த்தக ரகசியங்களை வணிகப் போட்டியாளர்களுக்குச் சாந்தே கியூபெக் வெளிப்படுத்தியதாக, பெட்டல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பட்ரிஸ் கில்பர்ட் (Patrice Gilbert) தெரிவித்துள்ளார்.
கியூபெக் மாகாண சுகாதார அமைப்பான சாந்தே கியூபெக் அமைப்பு, இக் குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

