அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு இடையிலான வடக்கு எல்லைப் பகுதி (Northern Border) அமெரிக்காவின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதாகவும், அங்கிருந்து போதைப்பொருட்களும் சட்டவிரோதக் குடியேற்றக்காரர்களும் அமெரிக்காவிற்குள் பெருமளவில் நுழைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இக்கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.
இருப்பினும், அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள், அந்த நாட்டின் நாடாளுமன்றக் குழுவிடம் சமர்ப்பித்துள்ள அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுக்கும் விதமாக அமைந்துள்ளன.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் கேபிடல் ஹில்லில் (Capitol Hill) நடைபெற்ற எல்லையோரப் பாதுகாப்பு மற்றும் அமலாக்கத் துணைக் குழுவின் (House border security and enforcement subcommittee) விவாதக் கூட்டத்திலேயே இந்தத் தரவுகள் வெளிவந்துள்ளன.
அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படையின் தற்காலிகத் துணைத் தலைவர் (Acting Deputy Chief) ஜேசன் ஷ்னைடர் (Jason Schneider) அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையின்படி, கனடாவுடனான வடக்கு எல்லையில் போதைப்பொருள் பறிமுதல் முந்தைய ஆண்டை விட 55 சதவீதம் சரிவடைந்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் மட்டுமல்லாது, கனடா எல்லைப் பகுதி வழியாக அமெரிக்காவிற்குள் நுழைய முயன்ற சட்டவிரோதக் குடியேற்றக்காரர்களின் கைது எண்ணிக்கையும் (Apprehensions) கணிசமாகக் குறைந்துள்ளதாக, அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.


