ஒன்டாரியோ மாகாணக் காடுகளில் வீரியமாகப் பரவி வரும் காட்டுத்தீயினால் வெளிப்படும் அடர் புகை, எல்லை கடந்து அமெரிக்க மாநிலங்களின் வளிமண்டலத்தை கடுமையாகப் பாதித்து வருவது குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் மார்க் கார்னியை நேரில்
சந்தித்து தனது பலத்த கண்டனத்தையும் எச்சரிக்கையையும் பதிவு செய்துள்ளார்.
நியூ ஜெர்சியில் நடைபெற்ற ஃபிஃபா (FIFA) உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியின் போது, இரு நாட்டுத் தலைவர்களும் நேருக்கு நேர் சந்தித்து உரையாடிய போதே இக்கடுமையான எச்சரிக்கையை டிரம்ப் விடுத்துள்ளார்.
போட்டி முடிந்து திரும்பிய பின்னர் ஆண்ட்ரூஸ் கூட்டு விமானப் படைத்தளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் காற்றை நச்சு ஆக்குவதை நிறுத்திவிட்டு, கனடாவில் எரியும் காட்டுத்தீயைக் உடனடியாகக் கட்டுப்படுத்த நடவடிக்கை
எடுக்குமாறு பிரதமர் மார்க் கார்னியிடம் தாம் நேரடியாகவே தெரிவித்துவிட்டதாகக் கூறியுள்ளார்.
மார்க் கார்னியுடன் தனக்கு நல்லுறவு உள்ளது எனக் கூறிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஆனால் அங்கிருந்து அமெரிக்காவுக்குள் வரும் புகையை உடனடியாகத் தடுத்தாக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த சுற்றுச்சூழல் பாதிப்பிற்காக கனடா தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் இல்லையெனில் கனடாவின் இறக்குமதிப் பொருட்கள் மீது மேலதிகச் சுங்கவரிகளை (Tariffs) விதிக்க நேரிடும்” எனவும், அமெரிக்க அதிபர் திட்டவட்டமாக எச்சரித்துள்ளார்.
ஒன்டாரியோ காடுகளில் மூண்டுள்ள நூற்றுக்கணக்கான காட்டுத்தீப் பரவல்கள் காரணமாக வெளிவரும் அடர்ந்த புகைப்படலம், தற்போது அமெரிக்காவின் மத்திய மேற்கு (Midwest), வடகிழக்கு (Northeast) மற்றும் மிட்-அட்லாண்டிக் பிராந்தியங்களை முற்றாகச் சூழ்ந்துள்ளது.
இதனால் வளிமண்டலக் காற்றின் தரம் ஆபத்தான நிலையை எட்டியுள்ளதால், அமெரிக்க மக்களை வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அமெரிக்க சுகாதார அதிகாரிகள் தொடர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தச் சூழ்நிலையிலேயே, கனடாவுக்கான அமெரிக்க அதிபரின் புதிய எச்சரிக்கை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
கனடாவிலிருந்து வீசும் நச்சுப் புகையைக் காரணம் காட்டி, கனேடியப் பொருட்கள் மீது மேலதிக சுங்கவரிகளை விதிக்கப்போவதாக டிரம்ப் அச்சுறுத்தியுள்ளமை இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக மற்றும் தூதரக உறவுகளில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்பின் இப் பகிரங்க விமர்சனங்கள் குறித்து, பிரதமர் மார்க் கார்னியின் அலுவலகம் உடனடியாக உத்தியோகபூர்வ பதிலெதனையும் வெளியிடவில்லை.
எனினும், சமூகவலைத்தளப் பதிவொன்றில் கருத்து தெரிவித்திருந்த பிரதமர் மார்க் கர்னி, காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த கனடா தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் 5,300க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். தீ பரவும் இடங்களை உடனுக்குடன் கண்டறிந்து கட்டுப்படுத்த
செயற்கைக்கோள் தரவுகள் மற்றும் வெப்ப வரைபடத் தொழில்நுட்பங்கள் (Thermal imaging) பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
மத்திய அரசாங்கத் தரவுகளின்படி, நடப்பு பருவத்தில் இதுவரை சுமார் 2.4 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவிலான காடுகள் தீக்கிரையாகியுள்ளமை குறிப்பிடத் தக்கது.



