ருவாண்டாவில் நடைபெற்ற கொடூர இனப்படுகொலையில் ஈடுபட்டு, கடந்த 30 ஆண்டுகளாகக் கனடாவில் போலி அடையாளத்துடன் தலைமறைவாக வாழ்ந்துவந்த குற்றவாளி ஒட்டாவாவில் கைது செய்யப்பட்டமை குறித்து, அப்படுகொலையிலிருந்து தப்பிப்பிழைத்தவர்களும் கனடாவிற்கான ருவாண்டா உயர்ஸ்தானிகரும் தங்களது நிம்மதியையும் மகிழ்ச்சியையும்
வெளியிட்டுள்ளனர்.
1994 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ருவாண்டாவில் இனப்படுகொலை இடம்பெற்றது. அந்த இனப்படுகொலையின் போது ‘துட்சி’ (Tutsi) இன மக்களுக்கு எதிரான படுகொலைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட 68 வயதுடைய லோரண்ட் ந்டுவாயேசு (Laurent Nduwayezu) என்பவரை, கனேடிய அரச பொலிஸார் ஒட்டாவா நகரில் வைத்து கைது செய்துள்ளனர்.
ருவாண்டா அரசுத் தரப்பு தகவல்களின்படி, 1994 இல் ‘பிரலிரவா’ (Bralirwa) நிறுவனத்தின் பாதுகாப்புத் தலைவராக இருந்த ந்டுவாயேசு, ‘ருபாவு’ (Rubavu) பகுதியில் ‘துட்சி’ இன மக்களைக் கொல்வதற்கான கூட்டங்களை ஒருங்கிணைத்து படுகொலைகளை முன்னெடுத்ததாகப் குற்றம்
சாட்டப்பட்டுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு ருவாண்டா அரசாங்கத்தால் இந்த நபர் மீது சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் குறித்த நபர் ரோலண்ட் ந்டுவாயோ (Roland Nduwayo) என்ற போலி அடையாளப் பெயரில் கனடாவில் வாழ்ந்து வந்துள்ளார்.
கியூபெக் மாகாணத்தில் உள்ள கினோ (Gatineau) நகரில் வாழ்பவரும் ருவாண்டா இனப்படுகொலையிலிருந்து தப்பியவருமான ஃபிலிபெர்ட் முசிமா (Philibert Muzima) இந்து குறித்து கருத்து தெரிவிக்கும் போது, “30 ஆண்டுகளுக்குப் பிறகாயினும் குற்றவாளி நீதியின் முன் நிறுத்தப்படவுள்ளது பெரு நிம்மதியைத் தருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கியூபெக் மாகாணத்தில் ருவாண்டா இனப்படுகொலையின் நினைவுகளைப் பாதுகாத்துவரும் ‘ஹுமுரா’ (Humura) அமைப்பின் உறுப்பினரான ஃபிலிபெர்ட் முசிமா, அந்த இனப் படுகொலையின் போது தனது பெற்றோர், 4 சகோதரிகள் மற்றும் 2 சகோதரர்களைப் பறிகொடுத்தவர் ஆவார்.
தானும் கழுத்தில் வாளால் வெட்டப்பட்டு, உயிரிழந்துவிட்டதாகக் கருதி கைவிடப்பட்ட நிலையிலேயே உயிர் தப்பியதாகக் குறிப்பிட்டார்.
இதேவேளை, கனடாவிற்கான ருவாண்டா உயர்ஸ்தானிகர் புரோஸ்பர் ஹிகிரோ (Prosper Higiro) இக்கைது நடவடிக்கைக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
ருவாண்டாவில் இனப்படுகொலை நடந்து 32 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், கனேடியப் பொலிஸாரால் குற்றவாளி அடையாளம் காணப்பட்டு கைதாகியுள்ளது திருப்தியளிக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ருவாண்டா இனப்படுகொலையில் தொடர்புடைய சுமார் 1,200 சந்தேக நபர்கள் உலகளவில் தலைமறைவாக உள்ளதாகவும், அதில் ஒரு டசனுக்கும் அதிகமானோர் கனடாவில் இருக்கலாம் என்றும் கனடாவிற்கான ருவாண்டா உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டினார்.
அந்த நபரின் அடையாளத்தை நுட்பமாக உறுதி செய்வதற்காக கனேடிய பொலிஸ் அதிகாரிகள் நேரில் ருவாண்டாவிற்குச் சென்று மரபணு மாதிரிகளைச் சேகரித்து தீவிர ஆய்வு நடத்தியுள்ளமை தற்போது தெரிய வந்துள்ளது.
போலி அடையாளத்தைப் பயன்படுத்தி கனேடிய கடவுச்சீட்டைப் புதுப்பித்தமை தொடர்பில், சந்தேகநபர் லோரண்ட் ந்டுவாயேசு மீது தற்போது 16 குடியகல்வுச் சட்ட மீறல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



