கனடா, அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளுக்கு இடையேயான வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் (CUSMA) மறுஆய்வுத் திகதி நெருங்கி வரும் வேளையில், எழுந்துள்ள வர்த்தகப் பதற்றங்களைத் தணிக்கும் நோக்கில், அமெரிக்காவுக்கான கனடா தூதர் மார்க் வைஸ்மேன் (Mark Wiseman) முக்கிய விளக்கமளித்துள்ளார்.
கனடா-அமெரிக்கா-மெக்ஸிகோ வர்த்தக ஒப்பந்தத்தின் 16 ஆண்டுகால நீட்டிப்புக்கான அதிகாரப்பூர்வ மறுஆய்வுக் காலம் (Renewal Window) எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி தொடங்குகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பிக்கப் போவதில்லை என அண்மையில் அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.
இதனால் நாட்டின் வர்த்தக வட்டாரங்களில் இதுகுறித்து பெரும் கவலை நிலவியது.
இந்நிலையில், டொராண்டோவில் நடைபெற்ற ‘கனடியன் கிளப்’ (Canadian Club Toronto) கூட்டத்தில் பேசிய அமெரிக்காவுக்கான கனடா தூதர் மார்க் வைஸ்மேன், ஜூலை முதலாம் திகதி என்பது ஒப்பந்தம் முடிவடையும் நாள் அல்ல, அது சிக்கல்களைப் பேசித் தீர்ப்பதற்கான ஒரு கால அவகாசத்தின் தொடக்கமே என்பதைத் தெளிவுபடுத்தினார்.
மூன்று நாடுகளும் ஒப்பந்த நீட்டிப்புக்கு உடன்படத் தவறினால், அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் ஆண்டுதோறும் மறுஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


