கியூபெக் மாகாணத்தில் எதிர்க்கட்சியான கியூபெக் லிபரல் கட்சி (PLQ) மற்றும் பார்ட்டி கியூபெகோவா (Parti Québécois – PQ) ஆகிய இரு முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கிடையே கடுமையான முரண்பாடு வெடித்துள்ளது.
கியூபெக் லிபரல் கட்சியின் தேர்தல் நிதித் திரட்டலைத் ‘திட்டமிட்ட குற்றக் கும்பலின்‘ (Organized Crime) செயல்பாடுகளோடு ஒப்பிட்டுப் பேசிய பார்ட்டி கியூபெகோவா கட்சியின் தலைவர் பால் செயின்ட்-பியர் பிளாமோண்டனுக்கு (Paul St-Pierre Plamondon) எதிராக, லிபரல் கட்சி அதிகாரப்பூர்வமாக ”வழக்கிற்கு முந்தைய சட்ட அறிவித்தலை” அனுப்பியுள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் மாகாணப் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள பரபரப்பான அரசியல் சூழலில், இந்த முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
அரசியலில் எத்தகைய கடுமையான விமர்சனங்களையும் சகித்துக் கொள்ள தாம் தயாராகவே இருப்பதாகவும், ஆனால், தனது கட்சியின் தொண்டர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் புதிய வேட்பாளர்களின் நற்பெயரைச் சிதைக்க முயன்றால் தாம் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளப் போவதில்லை எனவும் லிபரல் கட்சித் தலைவர் சாள்ஸ் மில்லியார்ட் தெரிவித்துள்ளார்.
வெறும் அரசியல் ஆதாயத்திற்காகப் பொதுமக்களைத் திசைதிருப்பவும், சந்தேக விதைகளை விதைக்கவும் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான குற்றச்சாட்டுகளை, பார்ட்டி கியூபெகோவா கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளதாக, லிபரல் கட்சித் தலைவர் சாள்ஸ் மில்லியார்ட் விமர்சித்துள்ளார்.
இதேவேளை, இந்த விவகாரத்தில் தாம் ஒருபோதும் மன்னிப்புக் கேட்கப் போவதில்லை என்றும், தமது கருத்துக்களை மீளப் பெறப்போவதில்லை என்றும் பார்ட்டி கியூபெகோவா கட்சியின் தலைவர் பால் செயின்ட்-பியர் பிளாமோண்டன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


