அல்பெர்ட்டா (Alberta) மாகாணம் நாட்டிலிருந்து தனியாகப் பிரிந்து சுதந்திர நாடாக மாறுவது குறித்து, எதிர்காலத்தில் ஒரு சட்டப்பூர்வமான இறுதி வாக்கெடுப்பை நடத்துவதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கான மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அல்பெர்ட்டா மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித் தொலைக்காட்சி வழியே ஆற்றிய சிறப்பு உரையில் இதனை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார்.
தனது தொலைக்காட்சி உரைக்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, முதல்வர் ஸ்மித் தனது அமைச்சரவையினை மாற்றியமைத்தார்.
இந்த அறிவிப்பின்படி, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி நடைபெறவுள்ள அல்பெர்ட்டா மாகாண பொது வாக்கெடுப்பில், இந்தப் பிரிவினை தொடர்பான புதிய கேள்வியும் 10ஆவது கேள்வியாக உள்ளடக்கப்படவுள்ளது.
இந்தப் புதிய அறிவிப்புக்கு பின்னால், அண்மைய நாட்களில் அல்பெர்ட்டா மாகாணத்தில் நிகழ்ந்த தீவிரமான அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்கள் காரணியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
