கனேடிய எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் வெளியுறவு விவகாரங்களுக்கான நிழல் அமைச்சர் மைக்கல் சொங் (Michael Chong) தாய்வானுக்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
சீன அரசாங்கத்தின் கடுமையான ராஜதந்திர எச்சரிக்கைகளையும் தடையுத்தரவுகளையும் பகிரங்கமாக நிராகரித்தே, அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்தப் பயணம் ஆனது, கனேடிய இறையாண்மையை சர்வதேச அரங்கில் நிலைநிறுத்துவதற்கான ஒரு முக்கிய நகர்வு என அவர் பிரகடனப்படுத்தியுள்ளார்.
தனது நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ பயணத்தின் போது, மைக்கல் சொங், தாய்வானின் புதிய அதிபர் லாய் சிங்-டேவை (Lai Ching–te) நேரில் சந்தித்து உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இனி தாய்வானுக்குச் செல்லக் கூடாது என்றும், மீறினால் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் கனடாவுக்கான புதிய சீனத் தூதுவர் வாங் டி (Wang Di) கடந்த மாதம் எச்சரித்திருந்தார்.
இந்த நிலையிலேயே, மைக்கல் சொங்கிற்கும் தாய்வான் அதிபருக்கும் இடையிலான இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
